வியாழன், 4 ஏப்ரல், 2024

                  வாழ்க்கை


மனத்தை மதித்து போற்றிடவும்

                மாண்பைச் சொல்லி நடத்திடவும்

குணத்தைக் குன்றாய்க் கொண்டிங்குக்

                கூடி வாழும் வாழ்க்கையில்

இன்பம் துன்பம்  இணைந்தாலும்

                ஏற்றத் தாழ்வு சேர்ந்தாலும்

பணத்தை முதலாய்க் கொள்ளாது

                பட்டம் பதவி யெண்ணாது


கணவன் மனைவி உறவென்று

               கட்டுப் பட்ட வாழ்க்கையில்

அன்பும் அறனும் தழைத்தோங்கும்

               அமைதி கொண்ட நல்லறத்தை

இன்று போல என்றென்றும்

              இனிதாய் நிலைக்கச் செய்திடவே

அன்றே சொன்ன மறைபொருளை

              அறிந்து நீயும் செயல்படு

                      ஓய்வு

ஓயாமல் உழைக்கின்ற

              உழைப்பாளர் உடம்பெல்லாம்

காயாத நீர்த்துளியாய்க்

              கசிந்துருகி வந்தாலும்

தேயாதத் தெம்போடு

              தெளிவான உணர்வினையும்

ஓயாமல் ஊட்டும்நல்

              உறக்கம்தா னேவோய்வு

                   பூங்கா

தள்ளாத வயதினர்கள்

             தளர்ந்த மனத்தோடும்

துள்ளாதத் துடிப்போடும்

            துவண்டிடும் வேளையில்

சொல்லாத சொற்கொண்டு

           சொந்தமில்லா உறவோடும்

கள்ளமின்றிப் பேசியே

           களைப்பாறு மிப்பூங்கா          


 

லீ குவான் யூ

கங்குகரை யேதுமில்லா

கடல்சூழ்ந்த தீவுதனைச்

சிங்கையென்னும் நாடாகச்

சீர்தூக்கிச் சிறப்பாக்கி

எங்குமுள்ள நாட்டினரும்

இங்குவந்து பணிசெய்ய

தங்கநிகர் தரத்தோடு

தரணியிலே தவழவிட்டார்

 

பங்குனியும் சித்திரையும்

பாதிபாதி கலந்தேதான்

சங்கமிக்கும் கோடையிலும்

தீஞ்சுவையாய்த் தித்திக்கும்

பொங்குதமிழ் புலமையினைப்

புவியோர்கள் போற்றிடவே

தங்குதடை யேதுமின்றித்

தமிழுக்கே இடம்தந்தார்  

                                         படிப்பினை

நேற்றுமுதல் இன்றுவரை நெருக்கடிகள் வந்தாலும்

      நிலையில்லா நிம்மதிதான் நெஞ்சமதில் சூழ்ந்தாலும்

தூற்றுவோர்தம் துவேசங்கள் துளைபோலத் துளைத்தாலும்

      துரத்துகின்ற தொல்லைகள் தொடர்ந்தெம்மைத் தாக்கினாலும்

ஏற்றமில்லா வாழ்க்கைதான் எங்கெங்குச் சென்றாலும்

      எல்லையில்லாத் துன்பத்தில் எதிர்நீச்சல் போட்டாலும்

மாற்றமில்லா நல்வாழ்வில் மனிதமென்ற மெய்ம்மையினை

     மறையோதும் படிப்பினையாய் மனதளவில் போற்றிடுவேன்





நேற்றுமுதல் இன்றுவரை

நெருக்கடிகள் வந்தாலும்

தூற்றுவோர்தம் துவேசங்கள்

தொடர்ந்தெம்மைத் தூற்றினாலும்

ஏற்றமுற வாழ்வதற்கு

எதிர்நீச்சல் போட்டிடுவேன்

மாற்றமில்லா நல்வாழ்வை

மனதளவில் கற்றிடுவேன்


வெள்ளி, 24 நவம்பர், 2023

 

அமரர் சுப அருணாசலம் அவர்களின் நினைவு

சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி 2023

 

தலைப்பு - ஓரிடம் கிடைக்கும் உணவுகள்

 

சிங்கை நாடே! சிங்கை நாடே!

சிறப்புடன் திகழும் சிங்கை நாடே!

எங்கு முள்ள உணவுக ளெல்லாம்

ஓரிடம் கிடைக்கும் சிங்கை நாடே!

சிங்கை நாடே! சிங்கை நாடே!

சீனம் மலாய் இந்தியர் உணவுகளையும்

மேலைக் கீழை நாட்டு உணவுகளையும்

சிறியோர் பெரியோர் இளையோர் கூடிச்

சேர்ந்தே அமர்ந்து உண்டு மகிழும்

சிங்கை நாடே! சிங்கை நாடே!

மரபு சார்ந்த முறையில் சமைத்த

இட்லி தோசை பூரிக் கிழங்கும்

நல்ல பன்னீர் மசாலாக் கூட்டும்

இங்கே எளிதாய் உண்ணக் கிடைக்கும்

சிங்கை நாடே! சிங்கை நாடே!

பாங்குடன் சமைத்த பசும்காய் கீரைகளும்

இறைச்சி சுக்கா வருவலோடு

நண்டு நத்தை மீனிறால் குழம்பும்

ரசித்து ருசித்துப் புசிக்க முடியும்

சிங்கை நாடே! சிங்கை நாடே!

 

சனி, 30 செப்டம்பர், 2023

 

நதி

கூட்டுச் சேர்ந்து கும்மிருட்டாய்க்

கூடி வந்த கருமேகம்

மேட்டுப் பக்கம்  மின்னலோடு

மேவி யெங்கும் பொழிந்ததாலே

காட்டு வெள்ளம் கரைதேடிக்

கடந்து வந்த பாதையெல்லாம்

நாட்டு மக்கள் நலம்வாழ

நான்கு பக்கம் ஆறாச்சு (நதியாச்சு)