ஞாயிறு, 6 மே, 2018


அந்த அவள்...

அறுமூன்று வயதுடைய அழகான பெண்ணவளை

அறுமூன்று திங்களாக அன்புடனே காதலித்தேன்

தெருவோரம் நின்றுநான் தினமொரு மலர்தரவே

பருவமுள்ள பெண்ணவளும் பாசமுடன் வாங்கிடுவாள்.


பலநாள் பழகியவள் பண்புடனே விளங்கியவள்

பலவிடமும் வந்து பலகதைகள் பேசியவள்

செலவில்லா இன்பத்தை சிந்தையில் நிறுத்தியவள்

சிலநாள் வாராது சின்னவனைத் தவிக்கவிட்டாள்!


என்னிடம் கொண்ட எல்லையில்லா அன்பைவிட்டு

கன்மனம் கொண்டகதை எப்படித்தான் நான்மறப்பேன்!

நன்றான குணத்தோடு நான்கிலக்க சம்பளமும்

கொண்டவன் இவனெனக் கூடிவாழப் போனவளை


ஓராண்டு முன்னே ஒளிமங்கும் நேரத்தில்

ஆற்றோர விடுதியிலே அரையிருட்டில் கண்டேன்!

யாராக இருக்குமென யான்மீண்டும் பார்க்க

சீரான வாழ்வைவிட்டுச் சீரற்றே நின்றாள்.


நானருகில் சென்றபோது, நயனத்தை ஈரமாக்கி

நானன்று பிறப்பதற்கு நல்வினை யாற்றியவர்

நானுனை மறப்பதற்கும் நஞ்சுவினை யாற்றியதால்,

நானின்று விடுதியிலே நானிழந்த பாவியானேன்!!




செவ்வாய், 1 மே, 2018


5. தமிழ்மொழி

சேர்ந்தா டம்மா சேர்ந்தாடு!
சிங்கைத் தமிழே சேர்ந்தாடு!
தேர்ந்த மொழியாம் தேன்தமிழைத்
தெரிந்த பாவால் பாராட்டு!

கன்னித் தமிழாம் நம்மொழியைக்
கண்ணின் மணியாய்க் காத்திடவே
எண்ணும் எழுத்தும் இரண்டோடும்
இன்தமிழ் புகுத்தி உரையாற்று!

வானம் பூமி உள்ளவரை
வளர்தமிழ் மொழியும் உண்டென்று
கானக் குயிலின் இசையோடு
      கலந்தே நீயும் புகழ்பாடு!



4 தொடர்வண்டி!

பாப்பா! பாப்பா! தொடர்வண்டி!
பாய்ந்து செல்லும் தொடர்வண்டி!
தாப்பா* இல்லா கதவுகளும்
தானாய் மூடும் தொடர்வண்டி!

எங்கள் நாட்டுத் தொடர்வண்டி!
ஏறிச் செல்ல ஏற்றவண்டி!
சிங்கை எங்கும் சென்றாலும்
சிறப்பாய்ப் பயணம் செய்திடலாம்!

காலை மாலை வேளையிலும்!
கடிதாய்ச் செல்லும் தொடர்வண்டி!
நாளை மாலை நாம்சேர்ந்து
நலமாய்ச் செல்வோம் வாரீரோ!


3. நட்பு

நட்பு நல்ல நட்பு!
      நன்மை செய்யும் நட்பு!
நட்பு இல்லா மனிதரை
      நலியச் செய்யும் நட்பு!

உயர்வு தாழ்வு பேதமின்றி
      உயிராய்ப் பழகும் நட்பு!
அயர்வு கொண்ட போதிலே
      ஆறுதல் தந்திடும் நட்பு!

கள்ளம் கபட மற்று
      கனிவாய்ப் பழகும் நட்பு!
உள்ளம் மகிழத் தானே
      உண்மை பேசும் நட்பு!


2. புத்தகம்

புத்தகம் நல்ல புத்தகம்!
      புதுமை நிறைந்த புத்தகம்!
புத்தம் புதிய எண்ணத்தைப்
      பதிய வைக்கும் புத்தகம்!

கருத்து விளக்கப் படங்களும்
கற்பனை நிறைந்த கதைகளும்
பொருத்த மிக்க வண்ணத்தில்
      பொதிந்து நிற்கும் புத்தகம்!

கற்றுக் கொடுக்கும் நீதியும்
கருணை கொண்ட உள்ளமும்
பெற்றுத் தந்த புத்தகம்!
பெருமை சொல்லும் புத்தகம்!


1. பள்ளி

கல்வி கற்கும் நாமெல்லாம்
கருத்தில் ஒன்று கூடவே
பள்ளிக் கூடம் போகலாம்!
      பாடந் தன்னைப் படிக்கலாம்!

சின்னஞ் சிறுவர் பலருமே
சேர்ந்து படிக்கும் பள்ளியில்
அண்ணன் தம்பி போலவே
அன்பாய்ப் பழகிப் மகிழலாம்!

கன்னித் தமிழைக் கற்கவும்
கலைகள் பலவும் அறியவும்
எண்ணம் கொண்டு நாளுமே
எழிலாய் கல்வி கற்கலாம்!


முடிவில் ஒன்று தொடரலாம் 30/04/2018


கெடுதல் இல்லா மனத்தோரே

உடைமை என்ற உரிமையை

எடுத்துக் காட்டி உரையாற்ற

கொடுத்து வைத்தவர் யாரோ


முடிவில் ஒன்று தொடரலாம்

தொடரும் ஒன்று முடியலாம்

நடுவில் வாழும் காலத்தே

கடமை யாவும் முடிக்கலாம்




தலையில்லா வீரன் 29/04/2018


நெஞ்சுக் கூட்டிலே வீரம்சொரிய

பிஞ்சுக் கரத்திலே வாளேந்தி

அஞ்சாமை யென்னும் உரமேற்றி

வஞ்சகர்முன் போர் செய்தயோ


களமாடும் வேளையிலே உந்தன்

தலைகீழ் நோக்கி வீழ்ந்தாலும்

வலக்கரம் ஏந்தும் வாளால்

குலப்பெருமை காக்க வந்தவனோ


தலையே போன பின்னும்

நிலைதன்னை கொஞ்சமும் மாற்றாது

பரியின் கடிவாளம் பிடித்து

வரிப்புலி வேங்கை போல


வாளெடுத்து சுழற்றும் உன்னை

வாழ்த்தவே வார்த்தை யில்லை

கண்ணை மீண்டும் கண்ணீரால்

வணங்கிடுவே னுந்தன் தாளை



வரிசை 28/04/2018

எந்த நாட்டில் பிறந்த போதும்

சொந்த பந்தம் ஏது மின்றி

நொந்த வாழ்க்கை வாழ்ந்த போதும்

வந்த நாட்டின் விதிகள் ஏற்றே


சிங்கை யென்னும் நாடு பெற்ற

மங்காப் புகழை மனத்தி லேந்தி

எங்கள் வாழ்வும் வளர்ச்சி காண

எங்கும் நிற்போம் வரிசை முறையில்


சிறிய நாடு எனினும் மக்கள்

வறுமை பெருமை பேத மின்றி

வரிசை வரிசை யாக நின்று

வரவு செலவு செய்யும் நாடு




அவனுடைய வெட்கம் – 27/04/2018


அவனுடைய வெட்கம் ஆம்

ஆணினுடைய வெட்கம்

பிஞ்சுக் குருத்தைப்

பிச்சுத் தின்று

பெருமை பேசிடும்

பித்தரைக் காண்பதும்


என்மதம் பெரிது

உன்மதம் சிறிது

எனவுளறி எக்களிக்கும்

எத்தரைக் காண்பதும்


காக்கும் கடவுளையும்

காட்சிப் பொருளாக்கிக்

காசுக்காய் விலைபேசும்

கயவரைக் காண்பதும்


காரியங்க ளாற்றிடவே

கையூட்டுக் கேட்கின்ற

கேடுகட்ட அதிகாரியைக்

கண்ணெதிரே காண்பதும்


பெண்ணென்றும் பாராமல்

போதைப் பொருளாய்ப்

புழங்கிட எண்ணும்

புல்லரைக் காண்பதும்


பாடசாலை சென்று

படிக்கின்ற வயதினிலே

பசிக்காகத் தொழில்செய்யும்

பாலரைக் காண்பதும்


அவனுடைய வெட்கம் ஆம்

ஆணினுடைய வெட்கம்




முகமற்ற புன்னகை 26/04/2018


உள்ளொன்று வைத்து

புறமொன்று காட்டும்

உயிரற்ற முறுவல்

முகமற்ற புன்னகை


கண்ணுக்குக் கண்ணேர்

காட்டாது கண்கவிலக்

காட்டிடும் முறுவல்

முகமற்ற புன்னகை


ஆயிரந்தான் பழகினாலும்

அழகழகாய்ப் பேசினாலும்

அன்பற்ற முறுவல்

முகமற்ற புன்னகை


ஆசைகொண்ட காரியங்கள்

அவசரமாய் முடிக்கவே

அர்த்தமற்ற நட்புகாட்டி

அரங்கேற்றும் முறுவல் முகமற்ற புன்னகை


முதுகுக்குப் பின்னே

முந்நூறு குறைபேசி

முகத்துக்கு முன்னே

முத்தாய்ப்புக் காட்டிடும்

முடிவில்லா முறுவல்

முகமற்ற புன்னகை




பேசப்படாத வார்த்தைகள் (சொல்லாத சொல்) – 25/04/2018


பேசப்படாத வார்த்தைகள் ஆம்

பேசப்படாத வார்த்தைகள்

முகத்தோடு முகம்நோக்கும்

முதல்விழிப் பார்வையிலே

அகத்தோடு அகம்தோன்றும்

அரிதான வார்த்தைகள்


பேசப்படாத வார்த்தைகள் ஆம்

பேசப்படாத வார்த்தைகள்

கண்ணோடு கண்பேசி

கருத்துக்கள் கலந்தபின்னே

உன்னோடு நான்பேச

உருக்கொள்ளா வார்த்தைகள்


பேசப்படாத வார்த்தைகள் ஆம்

பேசப்படாத வார்த்தைகள்

உற்றவரும் உறவினரும்

ஒன்றுகூடும் ஓரிடத்தில்

நற்றவர் நாவினிலே

நவிலாத வார்த்தைகள்


பேசப்படாத  வார்த்தைகள் ஆம்

பேசப்படாத வார்த்தைகள்

நல்லவரோ கெட்டவரோ

நானிலமும் பெற்றவரோ

உள்ளங்கள் இணைந்தபின்

ஊமையான  வார்த்தைகள்


பேசப்படாத வார்த்தைகள் ஆம்

பேசப்படாத வார்த்தைகள்



காதல் என்பது யாதெனில்... 24/04/2018


காதல் என்பது யாதெனில்...

கட்டிளம் காளையர்க்கும்

கருவிழி காரிகைக்கும்

மொட்டிளம் பூவாய்

முருவலிக்கும் உணர்வு


காதல் என்பது யாதெனில்...

உன்னுள் நானும்

என்னுள் நீயும்

இடமா றியதாய்

ஓர் உணர்வு


காதல் என்பது யாதெனில்...

நானும் நீயுமாய்க்

காணும் காட்சியில்

சுவைக்கும் சுவையில்

மாற்றமில்லா உணர்வு


காதல் என்பது யாதெனில்...

கண்டவர் இரந்து

கொண்டவர் சுரந்து

கொடுக்கும் அன்பைப்

பரிமாறும் உணர்வு


காதல் என்பது யாதெனில்...

முகம்காணா போதும்

மூச்சுவிடும் பொழுதும்

அகம்கொண்டு பேசும்

அன்புடை நெஞ்சம்


ஆதலால்...

ஆதலால்...

காதல் கொண்டு

காதல் கொண்டு

சாதல் வந்தும்

காதல் செய்வீர்