புதன், 3 பிப்ரவரி, 2016


மனிதநேயம் மலரட்டும்

 
மலரட்டும் மலரட்டும்

      மனிதநேயம் மலரட்டும்

ஒழுக்கமின்றி விழுப்பமின்றி

      ஒழுங்கான நெறியுமின்றி

அழுக்கான மனத்தோடு

      அழல்கின்ற மாந்தரிடம்

மலரட்டும் மலரட்டும்

      மனிதநேயம் மலரட்டும்!

 
பிறந்தபிள்ளை பெண்ணென்று

      பெருமைகொள்ளாப் பித்தர்க்கும்

எருக்கம்பால் கொடுத்துயிரை

      எமன்போலே பறிப்போர்க்கும்

இரக்கமற்ற செயலாலே

      இறந்தேதான் வாழ்வோர்க்கும்

உறைந்திருக்கும் உள்ளத்தில்

      ஊரட்டும் மனிதநேயம்

 

கஞ்சிக்கும் வழியின்றி

      காய்ந்திருக்கும் நம்நாட்டில்

பிஞ்சென்றும் காயென்றும்

      பேதமின்றிக் கொல்கின்ற

நஞ்சென்ற தீவிரவாதம்

      நாட்டைவிட்டுப் போவதற்கும்

நெஞ்சமென்ற நினைவேட்டில்

      நிறையட்டும் மனிதநேயம்!

 
மீலாத வஞ்சனையால்

      மெய்வருத்தம் செய்வோர்க்கும்

ஊழலென்னும் ஊழ்வினையால்

      ஓய்வின்றி உழல்வோர்க்கும்

காலநேரம் பார்க்காது

      கையூட்டுப் பெறுபவர்க்கும்

நாளெல்லாம் மலரட்டும்

      நலமான மனிதநேயம்!

 

அலட்சியமாய் அவலத்தை

      அரங்கேற்றும் அருவருப்பாய்

இலட்சியங்கள் இல்லாத

      இரக்கமற்ற இழிபிறப்பாய்

இலக்கில்லாத் தட்சனையை

      இலகுடனே கேட்போர்க்கு

உளம்திருந்த ஒருவாய்ப்பாய்

            ஒளிரட்டும் மனிதநேயம்!

 
மலரட்டும் மலரட்டும்

      மனிநேயம்  மலரட்டும்

ஒழுக்கமின்றி விழுப்பமின்றி

      ஒழுங்கான நெறியுமின்றி

அழுக்கான மனத்தோடு

      அழல்கின்ற மாந்தரிடம்

மலரட்டும் மலரட்டும்

      மனிதநேயம் மலரட்டும்!


நண்பனுக்குத் திருமணமாம்

பாலர் பருவம் தொட்டு
      பழகிடும் உயிர்நண் பனுக்குக்
காலை யிங்கு திருமணமாம்
      கண்கள் மிளிரும் குதூகலமாம்

சீனி வாச னோடு
      சேர்ந்தே உள்ளம் மகிழ
ஆனி ஆடி யாகிபின்
      ஆவணித் திங்கள் நாளில்

கோதையர் சுற்றம் சூழ
      குலமகள் குனிந்து நடக்க
மூதாதையர் கூடி யிருக்கும்
      முகூர்த்த சபையின் தன்னில்

மணமகள் அருகில் அமர
      மங்கள வாழ்த்துக் களோடு
குணமகள் வலம்புரி கழுத்தில்
      கட்டு கின்றான் தாலியினை

சந்திர கலா நெற்றியில்
      செந்தூரப் பொட்டு வைத்து
சொந்த மெனஅவள் கரத்தை
      சீனி வாசன் பற்றி

செந்தமிழ் குறளின் முப்பாலாய்
      சேர்ந்து எங்கும் புகழ்பரப்பி
சொந்தம் பந்தம் புடைசூழ
      தினமும் மகிழ்வுடன் நீவாழ

ஆல்போல் குடும்பம் விரிய
      அழகிய குழந்தைகள் நீபெற்று
நாளும் அன்பைப் பொழிந்தே
      நலமாய் வாழ்க வாழ்கவே!



சித்திரையே வா!

புத்தாண்டு வருகுதுபார்
      புதுப்பொலிவு தருகுதுபார்
மத்தாளம் கொட்டியினி
      மகிழ்வோடு இருந்திடவே

பெற்றோர்நம் பிள்ளையென
      பெருவாழ்க்கை வாழ்ந்திட்ட
உற்றார்நல் உறவோடு
      உளமாற வாழ்த்திடவே

தமிழன்னை பெற்றெடுத்த
      தலைமகளாம் தமிழ்மொழியை
தம்மீது தாங்கியவள்
      தரணியிங்கு வந்திடவே

சங்ககால இலக்கியமும்
      சமகால இலக்கியமும்
அங்கமெங்கும் பூட்டிட்ட
      அருந்தமிழை வாழ்த்திடவே

சித்திரத்தைப் போலிங்கு
      சிறப்பான வடிவோடு
சித்திரையாய் வருகின்றாள்
      சீர்கொண்டு தந்திடவே




 அடங்கியதோ உயிர்ப்பசி


நாவாய் மீதேறி செம்படவர்
      நாற்றிசை சென்றிடினும் கடலன்னை
பூவாய் அலைக்கரத்தால் தாலாட்டி
      புத்தெழுச்சி தந்திடுவாள் ஆயின்

ஈராயிரத் தினாலாம் ஆண்டு
      இறுதி வாரந் தன்னில்
ஊரோடு உலக மதிர
      உருவான ஆழிப் பேரலையே

சிறியோர் பெரியோ ரென்று
      சீர்தூக்கிப் பார்க்கா தெங்கள்
உரிமைப் பொருள்க ளென்று
      ஒருநொடியும் எண்ணாது நாங்கள்

கண்மூடித் திறப்பதற்குள் எங்கள்
      கரையோர குடியிருப்பும் உன்னலையால்
மண்மூடிப் போனதால் இன்று
      மாண்ட உயிர்பல வாகும்

தாவி பிடித்து விளையாடிய
      தாய்தந்தையை இழந்தோரும் தங்கள்
ஆவி கொடுத்து வளர்த்திட்ட
      அன்புக் குழந்தையை இழந்தோறும்

உறையும் இடமும் உண்ண
      உணவும் உடுத்தவுடை யும்மறந்து
கரையும் கண்ணோடு உடல்களை
      கடலோரம் தேடி அலைகின்றார்

மானுடத்தின் மதிப்புடை உயிரதனை
      மாபேரலை பறித்துப் போக
காணுகின்ற இடங்களில் எல்லாம்
      கணக்கில்லா உடல்கள் ஒதுங்க

தானேஅவ் வுடலின் சொந்தமென்று
      தாவியோடி அழுதிடும் காட்சி
வீணாய்பப் போனஆழிப் பேரலைக்கு
      விழியில் நீரைத் தாராதோ

ஊழித் தீவினையால் உலக
      உயிர்கள் மீது பாய்ந்திட்ட
ஆழிப் பேரலை யேயின்று
      அடங்கி யதோஉன் உயிர்ப்பசி



      

வாழ்க வாழ்கவே

தோரணங்கள் தொங்கிடும் மன்றத்தில்
      தோழரோடு சசிக்குமார் வீற்றிருக்க
ஆரணங்காம் விஜயலட்சுமி யைத்தோழியர்
      அவ்விடத்தே அழைத்து வந்தார்

ஊரார் கூடி உளமகிழ்ந்து
      ஒலித்திடும் உன்னத வார்த்தையோடு
பேரறிவு சபையோர் முன்னே, மாப்
      பிள்ளையவன் கட்டுகிறான் திருநாணை

செழுமை நிறைந்த உம்வாழ்வை
      சிறப்புடன் துவங்கி வாழ்ந்திட
குழுமி யிருக்கும் பெரியோர்கால்
      குறள்மொழி முழங்கி வாழ்த்திடுவர்

இனிதே இணையும் ஈருள்ளம்
      எழுச்சி மிகுந்த இன்பத்தால்
கனி,தேன் சுவையாய்க் கலந்துநீவிர்
      களிப்புடன் வாழ்க வாழ்கவே!