வியாழன், 11 மே, 2017

கவிஞர் திரு எம் கருணாகரனின் வேண்டுதல்

கடவுளிடம் கேட்டுப் பார்க்கலாம்
புண்ணிய ஆத்மாக்களின்
வருகைக்கான கால அளவை
நீட்டி வைக்காமல்
வேண்டுதலை நிறைவேற்ற
சீக்கிரம்
வருகையைத் துரிதப்படுத்தலாம்
என்று

வந்து போகின்றவர்களின்
ஆத்ம பரிவர்த்தனை
ஆக்கத்தையழித்து அழிவுகளைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறது

மனிதம் அழித்து மனிதம் வாழ
உபாசனைகள் தொடர்வதைத்
தடுக்க முடிவதில்லை

கடவுளைத் தேடிப் போனேன்

அவர் மழுங்கியக் கத்தியைத்
தீட்டிக் கொண்டிருந்தார்

சொற்செலவைக் குறைத்து, பொருட்பொதிவைக் கூட்டுகின்ற பைந்தமிழின் பெட்டகம்தான் கவிதை. இந்தக் கவிதைகள் மரபு சார்ந்தும் இருக்கலாம் அல்லது மரபினின்று விலகிப் புது வடிவாய் விளங்குகின்ற புதுக்கவிதை, ஹைக்கூ, குக்கூ .... இன்னும் பலவாய் இருக்கலாம். எது எப்படியோ கவிஞன் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளையோ செயல்களையோ தன் எண்ண உணர்வின் வெளிப்பாடாகப் பதிவிடுகிறான். அவை கவிதைகளாக மிளிர்கின்றன.

அந்தக் கவிதைகளைப் படிக்கும் வாசகன் அக்கவிதைகள் உணர்த்தும் செய்திகளை முதலில் தன் மனத்தின் ஓட்டத்திற்கு ஏற்பவோ தன் அனுபவத்திற்கு ஏற்பவோ தன் புறச் சூழலுக்கு ஏற்பவோதான் புரிந்துகொள்கின்றான். அடுத்ததாகத்தான் அக்கவிதைகளை வடித்த கவிஞனின் உள்ளத்தையும் அனுபவத்தையும் புறச் சூழலையும் புரிந்துகொள்கின்றான் அல்லது புரிந்துகொள்ள முற்படுகின்றான்.

அந்தவகையில் கவிஞர் எம் கருணாகரனின் வேண்டுதல் என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது நான் என் மனவோட்டத்திற்கும் அனுபவத்திற்கும் புறச்சூழலுக்கும் உட்பட்டே புரிந்துகொள்ள முற்பட்டேன். என் மனத்தில் தோன்றியது எவையெனில் இந்த உலகத்தில் நடக்கின்ற வேண்டாத செயல்கள், மனத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள், பிறருக்குத் தீங்கிழைக்கும் கொடுமைகள், பலிவாங்கும் எண்ணங்கள் போன்றவையே ஆகும். இவற்றின்மூலம் இவ்வுலகம் இற்றை நாளில் எதை நோக்கிச் செல்கிறது? இவற்றைப் போக்கும் வழிதான் என்ன? போன்ற வினாக்களும் தோன்றவே செய்கின்றன.

இவ்வினாக்களுக்கு விடை தேடிச் செல்லும் நம் கவிஞர் விருப்பமும் வாசகனான என் விருப்பமும் ஒன்றே. ஆம், அது இவ்வுலகை உய்விக்கும் உண்மையான புண்ணிய ஆத்மாக்களின் வருகையே. அப்போதாவது ஆக்கத்தை அழித்து, அழிவைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களையும் மனிதம் அழித்து மனிதம் வாழ உபாசனைகள் செய்பவர்களையும் தடுக்கலாம் அல்லவா?.

இருப்பினும், இவ்வாசையை நிறைவேற்ற கடவுளைத் தேடிப் போகும் கவிஞர் அங்கே மழுங்கிய கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த கடவுளைக் காண்பதாக முடிக்கிறார். இவ்வரியை கவிஞர் எந்தக் கருத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதினாரோ எனக்குத் தெரியாது. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அதுவும் எனக்குத் தெரியாது. அப்படி கடவுள் இருக்கும்பட்சத்தில் அந்தக் கவிதை வரிகளைப் படித்த வாசகனான எனக்குத் தோன்றியது ஒன்றுண்டு.

அதாவது, கடவுள் கத்தியைத் தீட்டிக்கொண்டு இருப்பது எதற்காக? என்று நான் ஆழ்ந்து சிந்திக்கும்போது கவிஞர் குறிப்பிடுவதுபோல் இவ்வுலகில் வந்து போகின்றவர்களின் ஆத்ம பரிவர்த்தனையானது ஆக்கத்தை அழித்து, அழிவைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மனிதம் அழித்து மனிதம் வாழும் உபாசனைகளைத் தொடர்கிறது. அத்தகைய ஆத்மாக்கள் தம்முடைய கொடிய பணியை முடித்துவிட்டு எப்படியும் தன்னை நாடி வரும். அப்பொழுது அவை செய்த செயல்வழி நின்று தண்டிப்பதற்காகவே என்று தோன்றியது.

பொன். கணேசுகுமார்,

சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக