வெள்ளி, 7 ஏப்ரல், 2023

கிராமத்துக் கீதம் 


மாமே பெத்த புள்ள

மாநிறத்து சின்னப் புள்ள

சாமை அரிசி குத்தி

சமைக்கிறியே என்ன புள்ள


கண்ணங் குழி விழ

கண்சிமிட்டிப் பார்க்கும்புள்ள

எண்ண மெல்லாம் சிறகடிக்க

இங்கு வந்து பேசுபுள்ள


சோளவளக் காட்டுக்குள்ள

சும்மா நின்னு பேசினாலும்

ஆளரவம் கேட்குதுன்னு

அங்குமிங்கும் பாத்த புள்ள


ஒத்தயடி பாதை ஒன்னு

ஊரோரம் போகுதுன்னு

அத்தமக  ரத்தினமே

அங்கு வரச் சொன்னபுள்ள


பட்டுமேனி நோகாமா

பந்தளுக்குள் வளர்ந்தபுள்ள

சிட்டாட்டம் பறக்குறீயே

செத்தநின்னு பேசுபுள்ள


கட்டொழுங்கு குழையாம

கண்ணியமா வளர்ந்தபுள்ள

கட்டழகன் நானிருக்கேன்

கைகோர்க்க வாடிபுள்ள


எதிர்வீட்டு ஜன்னல்வழி

எட்டியெட்டி பார்த்தபுள்ள

எதிரேநான் நிக்கிறேனே                                                                              

இங்குவந்து பேசுபுள்ள

  

அதிகாலை வேளையிலே 

ஆத்துக்குப் போறபுள்ள 

புதிரான கேள்வியாலே 

புருவத்தைச் சுழிப்பதென்ன  


தொலைதூரம் நானிருக்கேன் 

துன்பத்தில் தோய்ந்திருக்கேன்

தொலைபேசியில் பேசிநீயும் 

துன்பத்தைப் போக்குபுள்ள


அந்திசாயும் நேரத்திலே

அம்மாவோடு போறபுள்ள

முந்திநீ போனாலும்

முகம்காட்டிப் போடிபுள்ள


சந்தியோரம் நானிருக்க

சாடைபேசிப் போறவளே

பிந்தி நடைபோட்டு    

பின்னழகைக் காட்டுறீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக