ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 10 (23.052020)

'38 ஆம் மாடி வரை நீளும் கடல்'

வலியோரை வஞ்சிக்கா
வசதிகளும் வாய்ப்புகளும்
எளியோர்மேல் எப்போதும்
ஏறிநின்று விளையாடும்
நிலையற்ற நிச்சயத்தை
நித்தநித்தம் தருகின்ற
கலிகாலக் காசுக்கு
கட்டடங்கள் உயரமில்லை

எண்ணொன்றாம் மாடியிலே
இருக்கின்ற முத்தம்மா
வெண்பட்டுச் சேலைதனை
விலையோங்க வாங்கிவந்து
கண்பட்டுப் போவதுபோல்
காட்சிக்கு வைத்திடவே
எண்முப்பத் தியெட்டுவரை
ஏக்கமென்னும் நீண்டகடல்

வெள்ளமெனச் சூழ்ந்திடவே
வீட்டிலுள்ளோர் நிலைமையையும்
வெளியிலுள்ளோர் நிலைமையையும்
விபரமாக எடுத்துரைக்க
கள்ளமில்லா கண்ணம்மா
குடும்பத்தின் நிலையுணர்ந்து
உள்ளத்தில் தேங்கிநின்ற
கடலைவற்றச் செய்திட்டாள்

ஆழ்கடலின் ஆர்பரிப்பால்
அலைகளெல்லாம் எழுந்துவந்து
சூல்கொண்ட மேகத்தை
தொட்டுவிட துடிப்பதுபோல்
வாழ்வினிலே சூழ்கின்ற
வீழ்ச்சியென்னும் சோதனையை
வாழ்வதற்கு ஏற்றார்போல்
வசதியாக மாற்றிடுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக