நாள்
12
(25.05.2020)
'முதுமலரின் அந்திமம்'
இருவிழிகள்
இனித்திடவே
இளங்குருத்தாய்த் தோன்றுகின்ற
அரும்புகளும்
மொட்டுகளும்
அழகழகாய் இருந்தாலும்
நறுமணத்தைப்
பரப்புகின்ற
நன்மலரின் தோற்றத்தில்
இருக்கின்ற
எழிலுருவை
எவ்விடத்தும் காண்பதில்லை
சந்தியிலே
பூக்கின்ற
சிறியவகை மலர்களிலும்
அந்தியிலே
பூக்கின்ற
அரியவகை மலர்களிலும்
விந்தைமிகு
வாசனைகள்
விதவிதமாய் இருந்தாலும்
எந்தவிதக்
குறைபாடும்
இவற்றிற்குள் இருப்பதில்லை
காக்கின்ற
இயற்கையிடம்
கருணையினைக் காணாது
ஏக்கமுடன்
வாழ்கின்ற
எளியோரின் மனத்தினிலே
ஊக்கமென்னும்
அருமருந்தை
ஊட்டுகின்ற உன்னதமாய்ப்
பூக்கின்ற
பூக்களோட
புன்னகையில் பார்க்கின்றோம்
பூமியிலே
பூக்கின்ற
பூக்களிலே சிலமட்டும்
சாமிக்கும்
செல்வதுண்டு
சாவுக்கும் செல்வதுண்டு
சாமிக்குப்
புன்னகையும்
சாவுக்கு வேதனையும்
பூமியிலே
பூக்கின்ற
பூக்களென்றும் தருவதில்லை
புதுமலராய்
மலர்ந்தாலும்
புன்னகையால்
வாசனையைப்
பொதுவெளியில்
பரவவிட்டு
பாலினத்தைப் பெருக்கிடவே
மெதுமெதுவாய்
ஈர்ப்பதற்கு
மென்னிதழால் முறுவலிட்ட
முதுமலரின்
அந்திமந்தான்
முழுநாளில் முடிந்திடுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக