ஞாயிறு, 21 ஜூன், 2020


கம்பத்து வாழ்வியல்

தங்க ரத்தினமே! பொன்னு ரத்தினமே!
அன்பு ரத்தினமே! அழகு ரத்தினமே!
தங்க ரத்தினமே! பொன்னு ரத்தினமே!
அன்பு ரத்தினமே! அழகு ரத்தினமே!

தாய்மாமன் பெத்தபுள்ள தங்கரத்தினமே!
தாரமாக வருவதெப்போ பொன்னுரத்தினமே!
வாய்மூடிப் போவதென்ன அன்புரத்தினமே!
வாஞ்சையுடன் பதிலசொல்லு அழகுரத்தினமே!

மத்தாப்புப் புன்னகையைத் தங்கரத்தினமே!
முகம்நிறைய கொண்டவளே பொன்னுரத்தினமே!
அத்தாப்புக் குடிசையிலும் அன்புரத்தினமே!
அகழ்விளக்காய் ஒளிவீசும் அழகுரத்தினமே!
                                                                                    (தங்க ரத்தினமே! ...)

எப்போதும் என்நினைவால் தங்கரத்தினமே!
ஏக்கமுடன் வாழ்ந்தபுள்ள பொன்னுரத்தினமே!
வெப்புநோய் தாக்குமுன்னே அன்புரத்தினமே!
விருப்பத்தைச்  சொன்னபுள்ள அழகுரத்தினமே!

கம்பத்து வீதியிலே! தங்கரத்தினமே!
காத்திருந்தேன் பலநாளாய்ப் பொன்னுரத்தினமே!
அம்மாவைச் சொல்லிநீயும் அன்புரத்தினமே!
அண்டாமல் போனவளே அழகுரத்தினமே!
                                                                                      (தங்க ரத்தினமே! ...)

கப்பக்கிழங் கெடுத்துநானும் தங்கரத்தினமே!
காட்டுவழி வாரேனடி பொன்னுரத்தினமே!
இப்போது நீயிருந்தா அன்புரத்தினமே!
என்களைப்புத் தீருமடி அழகுரத்தினமே!

காட்டுவழி வருவதாலே தங்கரத்தினமே!
களைப்புயுன்னை வாட்டுதாடி பொன்னுரத்தினமே!
மாட்டுவண்டி ஓட்டிகிட்டு அன்புரத்தினமே!
மச்சான்நான் வரட்டுமாடி அழகுரத்தினமே!
                                                                                     (தங்க ரத்தினமே! ...)

அன்ன நடையழகித் தங்கரத்தினமே!
அழகுமயில் கண்ணழகிப் பொன்னுரத்தினமே!
சின்ன இடையாட்டித் தங்கரத்தினமே!
சினுங்குறேயே என்னபுள்ள சொல்லுரத்தினமே!

அத்தைபெத்த அழகுபுள்ள அன்புரத்தினமே
அத்தனையும் மறக்கலாமோ சொல்லுரத்தினமே
அத்தானைத் தேடிநீயும் அழகுரத்தினமே
அந்தியிலே வருவதெப்போ சொல்லுரத்தினமே

சொன்னாக்கா குறைஞ்சிடுமா தங்கரத்தினமே!
சோவிபல்லு சிரிப்பழகிப் பொன்னுரத்தினமே!
முன்னாடி வந்துநீயும் அன்புரத்தினமே!
மெல்லாம சொல்லுபுள்ள அழகுரத்தினமே!
                                                                                    (தங்க ரத்தினமே! ...)


தேக்காவுக்குப் போவோமடி தங்கரத்தினமே!
திரைப்படந்தான் பார்ப்போமாடி பொன்னுரத்தினமே!
ஏக்கமெல்லாம் சொல்லுபுள்ள தங்கரத்தினமே!
எல்லாத்தையும் தீர்த்திடுறேன் பொன்னுரத்தினமே!

தைமாதம் பொறத்திடுச்சுத் தங்கரத்தினமே!
தங்கத்தாலி வாங்கிடவா பொன்னுரத்தினமே!
கைமேலே மஞ்சளைத்தான் தங்கரத்தினமே!
கங்கணமாய்க் கட்டிடவா பொன்னுரத்தினமே!

தங்க ரத்தினமே! பொன்னு ரத்தினமே!
அன்பு ரத்தினமே! அழகு ரத்தினமே!
தங்க ரத்தினமே! பொன்னு ரத்தினமே!
அன்பு ரத்தினமே! அழகு ரத்தினமே!

கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக