நாள்
27 (09.06.2020)
'மழைச்சாரலைச் சுடும் தேநீர்'
மாலை
நேர மயக்கம்
மனத்தில் வந்து வருத்த
சாள
ரத்தின் வெளியே
சாரல் மழையும் தூவ
கோல
மயில்கள் கூடிக்
கொண்டை யழகைக் காட்டும்
வால்போல்
வளர்ந்த இறகை
வட்ட வடிவில் விரிக்கும்
மாலை
மங்கும் வேளை
மனிதர் கூட்ட மெல்லம்
வேலை
முடிந்து விரைவாய்
வீடு நோக்கிச் செல்ல
கோல
மயிலி னழகைக்
கொண்டி ளங்கும் பெண்ணோ
காளை
கண்ணில் பட்டுக்
காற்றா யலைய விட்டாள்
மழையின்
சாரல் வீழும்
மாலை மயங்கும் நேரம்
பழைய
பாடல் எங்கோ
பாடும் சத்தம் கேட்டுத்
தலையை
மெல்ல ஆட்டி
தாளம் போடும் உள்ளம்
அலையா
யலைந்து வாட
அந்த நாளைத் தேடும்
மழையின்
சாரல் வீழ்ந்து
மக்க ளெல்லாம் நனைய
குழந்தை
யாட்டம் துள்ளிக்
குதித்து எங்கு மோட
குளிரில்
உடலும் நடுங்கிக்
குடிக்கத் தேநீர் பருக
மழையின்
சாரல் கூட
மங்கிச் சூடாய் மாறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக