ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 14 (27.05.2020)

'நான் யார்?'

அருவ மில்லா நிலையை
அடைந்தே  யிங்கு வாழ
உருவ மொன்றின் வடிவில்
உடலு முயிரும் சேரும்
விருப்ப மில்லா  நிலையில்
வெளியில் வந்த போதும்
பருவம் வந்த பின்னே
பலனைக் கொடுக்க வேண்டும்

நீரால் தோன்றி வளர்ந்த
நீசம் பெற்ற உடலும்
ஊறிப் பெருத்த உடம்பாய்
உண்மை யற்றே வளர்ந்து
ஊரோர்  உறவோர் முன்னே
உனது வாழ்வு முடிய
நீராய்க் கரைந்தே யொருநாள்
நிலத்தில் மறைந்து போகும்

வேற்று மனிதர் வாழ
வேராய் விழுதாய்த் தாங்கி
வேறோர் உள்ளம் தன்னில்
வரைந்த படமாய்ப் பதிந்து
பாரோர் போற்ற வாழ்ந்து
பல்லோர் கதற மறையும்
பேரைப் பெற்றோர் மட்டும்
பிறவி வாழ்வை வாழ்வர்

நானாய் வாழும் வாழ்வை
நலமாய் வாழா விட்டால்
தேனாய் இனிக்கும் வாழ்வும்
தீர்ந்து போகும் முன்பே
வீணாய்ப் போன வாழ்வாய்
விழிமுன் வந்து போக
நான்யா ரென்ற வினாவும்
நாளை நம்முள் வருமே

          (வேறு)

யாரென்று கேட்கும் உலகோர்
யாவர்க்கும் உரைப்பேன்
ஊரோடு உற்றார் உறவும்
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்த
பாரென்ற இங்கு மட்டும்
பல்லுயிரும் பரந்து வாழும்
போரென்று ஒன்று வந்தால்
புல்பூண்டு யாவும் மறையும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக