ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 18 (31.05.2020)

'உண்பதற்குமுன் எடுத்த புகைப்படங்கள்'

வசிப்பிடங்கள் ஏதுமின்றி
வீதியோரம் வாழ்பவர்கள்
பசியோடு பட்டினியும்
பட்டயமாய்ப் பெற்றதனால்
கசிகின்ற கண்ணீரும்
கன்னத்தில் கரைந்தோட
விசும்பலோடு விரக்தியுமாய்
விழிமயங்க வீற்றிருக்க

கிள்ளைமொழிப் பிள்ளைகளும்
கிறங்கவைக்கும் பசியாலே
பள்ளிகூடச் செல்லாமல்
பெரும்பாடு படும்போது
உள்ளவர்கள் மனமுவந்து
உணவளிக்க எண்ணாமல்
புள்ளியற்ற ஒளிகொண்டு
புகைப்படமும் எடுக்கின்றார்

அடுக்கலையில் ஆக்கிவைத்த
அனைத்துவகை உணவினையும்
அடுத்தவர்கள் பார்த்ததுமே
ஆசைகொள்ளச் செய்வதற்கும்
மிடுக்கான விளம்பரமாய்
மின்னூட்டில் பதிவதற்கும்
எடுக்கின்றார் புகைப்படமாய்
எல்லோரும் பார்ப்பதற்கு

உணவுக்குப் பஞ்சமின்றி
ஊருக்குள் உறைந்திருக்கும்
பணக்காரக் கூட்டமொன்று
பகட்டான வாழ்வினிலே
உண்கின்ற உணவையெல்லாம்
ஊரார்க்குக் காட்டிடவே
உண்பதற்கு முன்னாலே
ஒளிப்படமும்  எடுக்கின்றார்

ஊடகத்தில் உலவுகின்ற
உணவுகளின் புகைப்படத்தை
தேடுகின்ற மனிதர்கள்
தினந்தோறும் விதவிதமாய்
வீட்டினிலே சமைத்தாலும்
வழியின்றிப் பசியோடு
நாடிவரும் ஏழைக்கு
நலம்செய்ய மனமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக