நாள்
32
(14.06.2020)
'ஒரே ஒருமுறை சுவாசித்துக்கொள்
சைகைகாட்டும்
கைபோலச் - சற்று
சாய்ந்திருக்கும் கிளைகளோடு
வைகையாற்றுக்
கரையோரம் - பரந்து
வளர்ந்திருக்கு மாலமரம்
கூகைமுதல்
குருவிவரை - மிகக்
குதுகலமாய் அமர்ந்திருக்க
தோகைமயில்
துடிப்புடனே - தன்
துணையோடு யாடிவரும்
ஆலையில்லா
ஆற்றோரம் - மிக
அழகழகாய்ப் பூத்திருக்க
சோலையொன்றை
வார்த்ததுபோல் - அந்தச்
சுற்றியுள்ள இடம்மாறும்
மாலைவெயில்
மஞ்சளாகிப் - பின்
மையிருட்டாய் மாறயிலே
சோலையெங்கும்
பூத்துள்ள - மலர்
சுகந்தத்தைப் பரப்பிவரும்
கொள்ளைகொள்ளு
மழகோடு - இந்தக்
குறையில்லா வாசனையும்
எல்லையின்றிப்
பரவியவை - இன்று
இல்லாமல் போனாலும்
உள்ளிருக்கு
மிதயத்தால் - ஒரே
ஒருமுறைநான் சுவாசித்துக்
கொள்வதற்குச்
சுகமான - காற்றுக்
கோர்வையினைத் தேடுகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக