ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 19 (01.06.2020)

'நட்பில் தொலைதல்'

சங்ககால வாழ்க்கையிலே
சமத்துவமாய் விளங்கிட்ட
பங்கமில்லா நட்போடு
பாசமுள்ள அன்பினையும்
இங்குள்ள இளையரிடம்
இருக்கின்ற இதயத்தில்
எங்குமில்லா இன்பமாக
ஈட்டிடவே விரும்புகிறேன்

வகுத்தநெறி வழுவாது
வாழ்கின்ற வாழ்க்கையினைப்
பகுத்தறிவுப் பெட்டகமாய்ப்
பாரினுக்குப் பகிர்ந்தாலும்
முகமறியா நட்புக்கும்
முன்னுரிமை தந்ததோடு
அகம்தோன்றும் அன்புக்கும்
ஆலயமும் செய்வித்தார்

வெள்ளைமனம் படைத்தவர்கள்
வெகுளியாக இருந்தாலும்
கள்ளமனம் இல்லாது
கருணையோடு வாழ்ந்தாலும்
உள்ளத்திலே தோன்றுகின்ற
உண்மையான அன்போடு
வெள்ளமென விரைந்தோடும்
விலையில்லா நட்பினையும்

அகத்தோடு அகமாக
ஆழ்ந்திருக்கும் அன்போடும்
முகத்தோடு முகமறியா
முகிழ்த்திருக்கும் நட்போடும்
நகத்தோடு சதைபோலே
நன்றாக இணைத்திடவே
சுகத்தோடு சுகம்கூடச்
சொந்தமெனச் சூழ்ந்திடுவார்

பேணாத பெருவாழ்வைப்
பிழையாகக் கொண்டிங்கு
வீண்வாழ்க்கை வாழ்கின்ற
விவேகமற்ற மாந்தருக்கு
நாணயத்தின் பிம்பமாக
நண்பர்கள் அமைந்துவிட்டால்
காண்கின்ற தவற்றையெல்லாம்
கணப்பொழுதில் களைந்திடுவார்

நட்பினாலே தொலைகின்ற
நல்லவர்கள் உள்ளத்தில்
மொட்டாகி அரும்புகின்ற
முல்லைமலர் வாசம்போல்
கட்டொழுங்காய் விளைகின்ற
கனிவான பரிவினையும்
கடமையாகக் கொண்டிங்குக்
கண்ணியத்தைக் காத்திடுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக