ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 16 (29.05.2020)

'கண்களைத் தாண்டும் கனவுகள்'

கனவு காண வேண்டும்
கண்கள் திறந்த போதும்
கனவை நினைவா யாக்க 
கலையா முயற்சி வேண்டும்
கனவில் மேன்மை வேண்டும்
காணும் கனவி லெல்லாம்
கனவான் அப்துல் கலாமும்
கனிவாய்ச் சொல்லிச் செல்ல

வெட்ட வெளியாய் மனத்தை
வைத்தி ருக்கும்  மனிதன்
பொட்டல் காடாய் விளங்கும்
புழுதி யற்ற நிலம்போல்
எட்ட முடியா வுயரம்
ஏறத் துடிக்கும் கனவைப்
பட்டா போட்ட நிலமாய்ப்
பாது காத்து வைப்பான்

உறவாய் வந்த சொந்தம்
ஊக்க வார்த்தை சொல்ல
பரந்து விரிந்த வெளியில்
பார்க்க முடியாத் தூரம்
விரவிக் கிடக்கும் மீன்போல்
விளைந்தி ருக்கும் கனவில்
சிறகை விரித்தே யெங்கும்
சிட்டாய்ப் பறந்து செல்வான்

கண்ணைத் தாண்டிச் செல்லும்
கனவு தானே யென்றும்
விண்ணைப் போல உயர்ந்து
விரைவில் நினைவாய் மலரும்
எண்ண அலையில் தோன்றும்
எல்லை யில்லாக் கனவும்
இன்பம் பொங்கும் மனத்தில்
இமயம் போலே நிற்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக