ஞாயிறு, 21 ஜூன், 2020



கொரோனா என்னும் கிருமி...

கொள்ளை கொண்டு போகும்  
கொரோனா என்னும் கிருமி
கள்ள மில்லா மனமும்
கருணை விழியும் கொண்டு
பிள்ளைப் பருவம் எய்த
பிஞ்சு களையும் தாக்கும்
பிள்ளை யாகிப் போன
பெரியோர் களையும் தாக்கும் 

வராது வந்த உறவும்
வழியில் வைத்துப் பார்த்தும்
விரோதி யாட்டம் நம்மை
விட்ட கன்று செல்ல
கொரோனா கிருமி வந்து
கொடிய நஞ்சைப் பரப்பும்
விராகத் தாபம் கொண்டு
வீதி எங்கும் சுற்றும்

உடலின் இயக்கம் நிறுத்தி
உயிரைப் போக்கும் தொற்றைத்
தடுத்து நிறுத்த வேண்டித்
தரணி வாழும் உயர்ந்தோர்
எடுத்து உரைக்கும் உரையை
ஏற்றுக் கொள்ள வேண்டும்
உடுத்தும் உடையில் கூட
ஒளிரும் தூய்மை வேண்டும்

 ஞாலம் சுற்றும் வைரஸ்
நாளை நமக்கு வருமுன்
மூல வேரை அறிந்து
முளையில் கிள்ள வேண்டும்
காலம் கடந்த பின்னும்
கண்ணைத் திறக்கா விட்டால்
மால முடியா இன்னல்
மலிந்து வந்தே சேரும்

மேலை நாட்டு மக்கள்
மரணப் பிடியில் சிக்கி
மாலு கின்ற காட்சி
மனத்தில் வந்து உறுத்த
நாளை விடியும் பொழுது
நமக்கு இல்லை யென்ற
வேளை வருமுன் காப்போம்
விரைந்தே முடிவு எடுப்போம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக