ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 22 (04.06.2020)

'தற்சார்பு வாழ்வே தனி'

வெற்றியினை நோக்கி விரைந்தோடும் வீரர்களின்
நெற்றியிலே தோன்றுகின்ற நீரெல்லாம் - வற்றினாலும்
முற்றாத மென்னரும்பு மொட்டாக வாழ்வோர்தம்
தற்சார்பு வாழ்வே தனி

நாட்டி லிருக்கும் நலிந்ததொரு வாழ்வினை
வீட்டி லிருப்போர் விரும்பினாலும் - கூட்டுவாழ்வைக்
கற்பிக்காக் கொள்கையினைப் பின்பற்றும் மானிடரின்
தற்சார்பு வாழ்வே தனி

கற்றறிந்த கல்வியினைக் கல்லாத மக்களுக்குக்
கற்றுக் கொடுக்காத கல்நெஞ்சக் - குற்றத்தைப்
பற்றோடு செய்கின்ற பாவிகளின் வாழ்வான 
தற்சார்பு வாழ்வே தனி

கூட்டுறவு கொள்கையிலே குற்றமேதும் காணாது
நாட்டுறவைப் பேணிவரும் நல்லவர்கள் - கூட்டத்திலே
வெற்றுவேட்டு வீசிவரும் வீணர்கள் வாழ்கின்ற
தற்சார்பு வாழ்வே தனி

மற்றவர்கள் வாழ்க்கையிலே மாற்றங்க ளேதுமின்றி
வெற்றுவாழ்வு வாழ்ந்திடவே வன்கொடுமை - குற்றங்கள்
வற்றாத வெள்ளமாய் வீதியெங்கும் விரைந்தாலும்
தற்சார்பு வாழ்வே தனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக