நாள்
8
(21.05.2020)
'எல்லைகளை யாரோ கொளுத்துகிறார்கள்'
நெஞ்சத்தில்
தோன்றுகின்ற நட்புக்கோ
நினைவினிலே நீண்டதொரு எல்லையுண்டு
வஞ்சத்தில்
உருவான வெற்றிக்கோ
வலிமையற்ற நிலையில்லா புகழுமுண்டு
மஞ்சத்தில்
நடத்துகின்ற விளையாட்டால்
மனம்மகிழ மாசற்ற மழலையுண்டு
கஞ்சத்தில்
விளைகின்ற காதலுக்கோ
கனிவற்ற கனமான கவலையுண்டு
பிறப்பென்றால்
இறப்பென்ற எல்லையுண்டு
பிழையில்லா வாழ்வெனினும் நிலையில்லை
உறவென்றால்
பிரிவென்ற எல்லையுண்டு
ஒருவயிற்று உறவெனினும் உண்மையில்லை
மறமென்றால்
உரமென்ற எல்லையுண்டு
மற்றவரைப் போற்றுகின்ற மனமில்லை
வரவென்றால்
செலவென்ற எல்லையுண்டு
வாங்கியதைக் கொடுப்பதிலும் வாய்மையில்லை
கருத்தென்றால்
மறுப்பென்ற எல்லையுண்டு
கனிவான பேச்சிற்கோ இடமில்லை
பொறுப்பென்றால்
எதிர்ப்பென்ற எல்லையுண்டு
பொறுமைக்குச் சிறிதெனினும் வாய்ப்பில்லை
இருவேறு
முடிவுகள்தாம் இருந்திடினும்
இவற்றிற்கு எத்தனையோ எல்லையுண்டு
இருந்தாலும்
மறந்தாலும் யாரோநம்
எல்லைகளை இரக்கமற்றே கொளுத்துகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக