சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 2 (02/04/2021)

தலைப்பு : சொந்தச் சிறைகள்

 

வானம் பார்த்து வரப்பெ டுத்து

வேளாண் செய்த காலம் மாறி

வானம் பார்த்த பூமி யெங்கும்

வற்றி வரண்டு போன தாலும்

வீணாய்ப் போகும் நிலத்தை யெண்ணி

விரக்தி கொண்ட இளையோ ரிடத்தில்

கூணல் விழுந்த முதுகைப் போல

குறையாய் வறுமை சூழ்ந்த தாலும்

 

சொந்தம் பந்தம் உறவும் விட்டு

சோக மெல்லாம் நெஞ்சி லிட்டு

கந்து வட்டி கடனும் வாங்கிக்

கடனை அடைக்க கடலும் தாண்டி

வந்த நாட்டின் மேன்மைக் கேற்ப

வாய்ப்புத் தேடி வறுமை போக்க

எந்த வேளை யான போதும்

இட்ட வேலை செய்து முடித்து

 

தூங்கும் வேளை வந்த போதும்

தொடர்ந்து வேலை செய்து செய்து

வாங்கும் காசில் கணக்குப் பார்த்து

வயிற்றைக் கழுவி மிச்சம் பிடித்து

ஏங்கும் எண்ணச் சிறகை யெல்லாம்

இங்கு வைத்துப் பூட்டி விட்டு

நோங்கி வந்த நோக்கம் கூட

நட்ட திந்தச் சொந்தச் சிறைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக