புதன், 17 அக்டோபர், 2018

கண்ணதாசன் பாட்டு 3 - சமனிலைச்  சிந்து


சிறுகூடல் பட்டிதன்னில் பிறந்தவர் - தம்
சொந்தத்தில் மகனாக வளர்ந்தவர்
சிறுவயதில் குறும்புபல செய்தவர் - தம்
சேட்டைக்குத் தண்டனையும் பெற்றவர்

சிந்தையிலே செந்தமிழைக் கொண்டவர் - உயர்
சிந்திக்கு மாற்றலினால் சிறந்தவர்
சந்தத்தில் சிந்துபல தந்தவர் - பாட்டுச்
சீர்மையிலே சிகரம்போல் நின்றவர்

திரைப்படத்தில் உரையெழுத வந்தவர் - பாட்டுத்
துறையினிலே தொலைதூரம் சென்றவர்
கரைகாணக் கற்பனையை கண்டவர் - மனக்
கணக்கில்லாக் கவிதைகளைத் தந்தவர்

எண்ணத்தின் எல்லைகளைத் தொட்டவர் - தமிழ்
எழுத்துகளில் வண்ணத்தைச் சேர்த்தவர்
பண்பாட்டின் பெரும்பொருளை யறிந்தவர் - நம்
பழந்தமிழின் பெருமையினை யுணர்ந்தவர்

அகப்பாட்டும் புறப்பாட்டும் கற்றவர் - அவற்றை
அனைவருக்கும் எளிதாக்கிக் தந்தவர்
சுகவாழ்வும் சுமைவாழ்வும் பெற்றவர் - அவற்றை
சமவாழ்வா யெண்ணியெண்ணி வாழ்ந்தவர்

முத்தமிழின் முதற்பொருளை யுணர்ந்தவர் - அதில்
முக்கனியின் சாற்றினையே சுவைத்தவர்
சித்தரையும் புத்தரையும் படித்தவர் - நல்ல
சிந்தனையில் சீர்தூக்கிப் நடந்தவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக