திங்கள், 15 அக்டோபர், 2018

கண்ணதாசன் வெண்பா 1


செட்டிநாடு ஈன்றுதந்த கண்ணதாசப் பாவலன்தன்
பட்டறிவு பாட்டறிவு யாவையும் - கொட்டிவார்த்த
கன்னித் தமிழ்பாக்களில் நல்ல கருத்தோடு
பண்பாட்டுக் கூறுகளு முண்டு


ஏட்டிலுள்ள காப்பியமும் காவியமும் சொன்னவற்றைப்
பாட்டாலே பாடியவன் பாமரனுக்கும் - ஊட்டியவன்
கன்னல் மொழியில் நவின்றவன் ஆண்டவனாம்
கண்ணனுக்குத் தாசனாய்த் தேர்ந்து


உன்னத வாழ்வின் உயர்வினை யூட்டிடும்
சின்னஞ் சிறிய தொடராலே - நன்முத்தா
யெண்ணமெல்லாம் ஊற்றெடுக்க இன்பந்தான் தந்திடுமே
கண்ணதாசன் பாட்டின் சுவை


முத்துமுத்தாய்ச் சொல்கொண்ட முத்தையா பாட்டிலே
தத்துவச்சீ ரான சமதர்ம வித்தோடு
பத்துமெட்டும் சேர்ந்த பதினெண் இலக்கியமும்
சத்தூட்டும் சாறாகும் காண்


சங்ககாலப் பாட்டையும் சாத்திரத்தி னேட்டையும்
பங்கமின்றிக் கற்றதனால் பைந்தமிழின் சீர்மையினைத்
தங்கநிகர் பாட்டுகளால் தட்டின்றித் தந்தமகன்
சிங்கத்தின் சீற்றம்போல் பாய்ந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக