புதன், 29 டிசம்பர், 2021

 

வான்புகழும் வள்ளுவர்

 

அறம்பொரு ளின்பமென அத்தனையும் கூட்டிக்

குறளடி வெண்பாவால் யாத்து - திறன்மிகு

சொல்லின்  கருத்தாலே வான்புகழ் கொண்டதாம்

வள்ளுவரின் உண்மைக் குறள்

 

நெஞ்சினில் வஞ்சமின்றி நேசமுடன் நட்புறும்

பிஞ்சுமனம் கொண்டோ ருறவினைக் - கொஞ்சமும்

வீணுறவா யெண்ணாமல் நட்பி னுயர்வூட்டும்

வான்புகழும் வள்ளுவர் சொல்

 

கயமையென்னும் கெட்டொழுக்கம் மானிடர்க் கொன்றும்

பயனில்லை யென்றுரைக்கும் பாட்டில் – நயமான

சான்றுகளும் நல்லபல வார்த்தைகளும் சீராக

வான்புகழும் வள்ளுவத்தி லுண்டு

 

உழவுத் தொழிலை யுயர்தொழிலா யெண்ணி

உழலும் உழைப்பாளர் முன்னே - உழவினை

மாண்புறச் செய்கின்ற வான்புகழும் வள்ளுவரின்

மேன்மையுறு சொல்லே குறள்

 

புழாலோடு கள்ளுண்டு புத்திகெட்டுப் போவோர்

உழலுகின்ற பூமியில் உண்மையற்ற – வாழ்க்கையினை

நல்லதல்ல யென்று நமக்குரைத்த வான்புகழும்

வள்ளுவரின் வாய்மையே நன்று

 

களவியல் கற்பிய லென்னு மியல்பிரித்துக் காதல்

உளவியலை யுண்மையுடன் சொல்லி  - விளக்குகின்ற

வான்புகழும் வள்ளுவரின் வார்த்தை வரிகளில் 

தேன்சொட்டும் பாலே குறள்

 

பருவப்பெண் நாணத்தைப் பாவினத்து வெண்பா

கருப்பொருளாய்க் கொண்டுவந்து போற்றும் – திருக்குறள்

வான்புகழும் வள்ளுவரின் வார்த்தைகளில் வந்தவையால்

தேன்போல் இனிக்குமே யென்றும்

 

கன்னியவள் மெய்யழகைக் கண்முன்னே காட்சியாக்க

வெண்பாவின் கூறுகளால் வார்த்தெடுத்து – மென்னரம்பு

வீணையில் மீட்டுகின்ற மெல்லிசைபோல் கேட்குமே

வான்புகழும் வள்ளுவரின் வாக்கு

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக