திங்கள், 24 ஜூன், 2024

 

இயற்கை என்றொரு கவிஞன்

(எண்சீர் விருத்தம்)

 

நிந்தனைக் கப்பால் நினைவுறு முலகில்

நிறைவுறா யியற்கை என்றொரு கவிஞன்

எந்நிலை வந்தும் எத்திசை போயும்

இயம்பிடும் படைப்பாய் எழிலுறும் காட்சி

சிந்தனைக் கினிய விந்தைகள் போல

சிறப்புடன் விளங்கிப் பழம்புகழ் பேசும்

செந்தமிழ் மொழியும் செவ்விய நடையில்

செரிவுடன் திரட்டி யுண்மைகள் சொல்லும்

 

வெந்தணல் தீயாய்க் வெயிலவன் விரைய

விரிகதிர் பரப்பிப் புனலினை யுறிஞ்சும்

மந்தென மாறும் வானிடை யெங்கும்

மையிருள் கொண்டு காரென நகரும்

சிந்திடும் சாரல் தூறலாய்ப் பெய்ய

சிறுதுளி யாகிப் பெருமழை யாகும்

வந்திடும் தண்ணீர் ஆறெனப் பாய்ந்து

வயல்வெளி யெங்கும் வளத்தினைச் சேர்க்கும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

அன்புள்ள அம்மாவிற்கு

(எண்சீர் விருத்தம்)

விண்வெளியின் வீதி யெங்கும் விரவினாலும்

விடிவெள்ளிக் கூட்டந் தன்னில் ஒளிர்கின்ற

வெண்மதியின் குளுமை தன்னைப் பெற்றிலங்கும்

விந்தையினை வேறு வேறாய்க் காட்டாது

பெண்ணினத்தின் பெருமை சொல்லும் பெட்டகமே!

பேரறிவே! அன்பிற் கினிய எனதம்மா!

வண்ணமய வாழ்க்கை பெற்று வாழ்ந்தாலும்

வயிற்றிலொரு பிள்ளை வளர வேண்டுமென்று

 

எண்ணத்தில் ஏற்றம் கொண்ட எனதம்மா!

எங்கெங்கோ தேடிக் கண்டத் திரவியமாய்

அண்டத்தில் பிண்டம் வைத்துச் சுமந்தாலும்

ஐயிரண்டு திங்கள் அயர்ந்தும் அயராமல்

கண்ணிரண்டும் காட்டு கின்ற கவலைதனை

களிப்பாக மாற்றி நிற்கும் விந்தையோடு

எண்ணில்லா ஏக்கம் தன்னில் இரஞ்சினாலும்

எல்லையில்லா மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றார்.

 

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

 

ஏழாம் அறிவு

(எண்சீர் விருத்தம்)

 

மூவிடத்துச் சங்கமதில் முறையாகக் கொழுவேற்று

முதுமொழியாய் முகம்கொண்டு முத்தமிழாய் வளங்கொழித்து

நாவினிலே நடம்புரியும் நறுந்தமிழின் இலக்கணத்தில்

      நானிலத்தை ஐந்தாக்கி நல்விதிகள் தீட்டினாலும்

பூவுலகில் வாழுகின்ற புலப்படாத உயிர்களுக்கும்

புலனறிவு முதற்கொண்டு பகுத்தறிவு ஈறாக

ஈவுடனே இனம்பிரித்து எளிமையுடன் உரைத்தாலும்

எம்மினத்தார் இவ்வேழாம் அறிவினையும் எட்டுகின்றார்

 

நுண்ணறிவு நுட்பத்தை நுணுக்கமுடன் நுகர்கின்ற

நோக்கத்தின் நுழைபுலமாய் விளங்குகின்ற நேர்த்தியினை

எண்ணில்லாச் செயலிகளாய் இணையத்தில் ஏற்றுகின்ற

ஈடில்லா இளையோரின் எழிலார்ந்த எழிச்சியிலும்

பண்பாட்டு வழிமுறையில் பண்பட்டு வந்தோர்க்குப்

பகுத்தாய்வுப் படிப்பினையைப் பறைசாற்றும் பாங்கினிலும்

விண்தொட்ட வீரியத்தை வெவ்வேறு வடிவாக

விளக்குகின்ற வெற்றிகளே இவ்வேழாம் அறிவாமே!

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்