அமரர் சுப அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி!
சிங்கப்பூரு சீமைக்குத்தான் போய் வருவோமா? - இரண்டாம் பரிசு பெற்றது.
சிங்கப்பூரு சீமைக்குத்தான் போய் வருவோமா? - கண்ணே
சிறப்பு வாய்ந்த இடங்களுக்கும் போய் வருவோமா?
சிங்கப்பூர் ஆற்றோரம் சுற்றி வருவோமா? – கண்ணே
சின்னச் சின்ன நிகழ்வுகளையும் நினைவுறுவோமா?
(சிங்கப்பூரு
சீமைக்குத்தான் ...?)
இங்குமங்கும் கட்டடங்கள் நிறைய இருக்குது - அவை
ஏற்றம் கொண்ட எழிலாலே பரந்திருக்குது
சிங்கமுக மெர்லயனும் எழுந்து நிக்குது – அதன்
சீற்றத்திலே நீரூற்றும் சீறிப் பாயுது
(சிங்கப்பூரு
சீமைக்குத்தான் ...?)
தெப்பமன்ன படகுகளும் ஒடுதுபாரு - அங்குக்
கரையோரம் இராட்டினமும் சுற்றுதுபாரு
கப்பலன்ன கட்டடமும் கண்ணைக் கவருது - அது
உயரமான கட்டடங்களின் மேலே இருக்குது
(சிங்கப்பூரு
சீமைக்குத்தான் ...?)
பொழுதுபோக்கும் வசதிகளும் நிறைந்திருக்கிது – அதுக்கு
புலானுபியும் செந்தோசாவும் சான்றாய்த் திகழுது.
விலங்குத்தோட்டம் பறவைப்பூங்க பரந்திருக்குது - இங்குப்
பல்லினப் பறவைகளும் விலங்குகளும் குழுமியிருக்குது
(சிங்கப்பூரு
சீமைக்குத்தான் ...?)
புரண்டுவரும் கடலலையோ கரையை முட்டுது – அதில்
பொங்கும் நுரை புதுவிதமாய்ப் புன்னகைக்கிது
திரண்டிருற்கும் கூட்டமெல்லாம் கடலை நோக்குது – அலைகள்
துள்ளியெழுந்து ஆடும்காட்சி கண்ணில் தெரியுது
(சிங்கப்பூரு
சீமைக்குத்தான் ...?)
சிங்கைக் கடலோரம் காலாற நடந்திடுவோமா? – நம்ம
கால்களையும் நனையவிட்டுக் களிப்புறுவோமா?
சீனமலாய் தமிழர்தம் உணவுகளை ருசித்திடுவோமா? – அங்குச்
திரையரங்கம் சென்றுதானே படம் பார்ப்போமா?
(சிங்கப்பூரு
சீமைக்குத்தான் ...?)