திங்கள், 27 அக்டோபர், 2025

 

பாடல் (சுப அருணாச்சலம்)

மயிலன்ன வண்ணத்தை மடிதன்னிலே பெற்றவளே!

மங்கலம்பொலியும் மகிழ்வோடு மணிவிழாவும் கண்டவளே!

கயலாடும் கடலினையும் காவலரணாய்க் கொண்டவளே!

கடமைகண்ணியம் கட்டுப்பாடெனக் கருத்தினில் வாழ்பவளே!  

சுயமென்னும் முகவரியில் சோம்பலையும் முறித்தவளே!

சுப அருணாவின் வாழ்த்தினையும் சுகமாக ரசித்தவளே!

 

நானிலங்கள் போற்றுகின்ற நாளும்வளர் சிங்கைத்தாயே!

நற்றமிழால் பாடுகின்றேன் நலம்புரிவாய் என்றும்நீயே!

வானிருந்து மின்னுகின்ற வண்ணவண்ண மின்மினிபோல்

வையகத்தின் தென்கிழக்கில் ஒளிர்கின்ற கண்மணியே!

 

 

அமரர் சுப அருணாசலம் நினைவு

சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி

 

மணிவிழா காணும் சிங்கப்பூர்

 

பல்லவி

காத்திருந்த காலமது கண்முன்னே தெரியுதடி

நேத்துவரை நாம்நினைத்த நிம்மதிதான் நிலவுதடி

பாத்துப்பாத்துப் பாடுபட்ட பாட்டன்பாட்டி உழைப்பெல்லாம்

பலன்கொடுக்கும் கனிமரமாய்ப் பக்கத்திலே நிற்குதடி

(காத்திருந்த காலமது)

சரணம் 1

மக்களுக்கான மாற்றங்களை மறுப்பின்றிச் செய்திடவே

மண்தோன்றி விண்தொடும் மாளிகையும் அமைத்ததடி

கல்வியும் மருத்துவமும் கட்டான பாதுகாப்பும்

கடல்தாண்டும் போக்குவரத்தும் கவலையகலச் செய்ததடி

(காத்திருந்த காலமது)

சரணம் 2

நுண்ணறிவு நுணுக்கங்களை நுட்பமுடன் உட்புகுத்தி

நூதன மாற்றத்திற்கு நுழைபுலனாய் விளங்குதடி

தொழில்நுட்ப வசதியோடு தொலைத்தொடர்பு வசதியையும்

தொய்வின்றிக் கொடுத்திங்கு தொடர்வெற்றி கண்டதடி

(காத்திருந்த காலமது)

சரணம் 3

அறுபத்தைந்தில் கண்டகனவை இருபத்தைந்தில் நிறைவேற்றி

அறுபதாண்டு கொண்டாட்டத்தை ஆர்ப்பரிக்கச் செய்தாலும்

அடுத்துவரும் காலத்திலும் அனைவரும் பயன்பெறவே

அறிவான திட்டங்களை அழகழகாய்த் தீட்டுதடி

(காத்திருந்த காலமது)

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

கி. கோவிந்தராசு புத்தகவெளியீடு பற்றி

தேன்பாகும் தெள்ளமுதும் தெவிட்டாமல் இனிப்பதுபோல்

நான்கொன்று படைப்புகளை நற்றமிழில் செய்வித்து

மாண்புடைய பெரியோர்முன் மதிப்புடனே வெளியிட்டு

மான்கவியாய் மகிழ்வோடு மக்கள்முன் நிற்கின்றாய்!

 

சிங்கை 60

சிங்கை மகள்” – ஏப்ரல் 2025

கங்குகரை யில்லாத கடல்நடுவே யமைந்தாலும்

சிங்காரச் சிங்கையென சீமையெங்கும் பேருபெற்றாய்

எங்குமில்லா இடவசதி இங்குனக்கில் லையெனினும்

மங்காத ஒளிகொண்டு மாட்சிமைகள் புரிகின்றாய்

 

சங்குவளர் கடலினையும் சதுப்புநிலக் காட்டினையும்

அங்கமெனக் கொண்டவளே! அமைதியினைப் பூண்டவளே!

சங்ககாலத் தமிழோடு சீனமலாய் மொழிகளையும்

அங்கமெல்லாம் அணிகலனாய் அணிந்துவலம் வருகின்றாய்

 

எங்கெங்கு நோக்கிடினும் எழிலார்ந்த ஓவியமாய்

செங்கொடியின் பட்டொளியில் சிறகடித்துப் பறக்கின்றாய்

நங்கூர மிட்டகப்பல் நாற்புறமும் நிற்பதுபோல்

செங்குத்துக்  கட்டடமாய்ச் சிகரம்போல் நிற்கின்றாய்

 

பொங்குமலை யாழியினைப் பொருளீட்டும் பொருளாக்கித்

தங்கநிகர் வருமானம் வாய்ப்பதற்கு வித்திட்டாய்

பங்குசந்தை முதற்கொண்டு படகுதுறை ஈறாக

பங்களிக்கும் இடமாக்கிப் பாங்குடனே தலைநிமிர்ந்தாய்

 

சிங்கமுகச் சீற்றத்தைச் சிலையுருவில் கொண்டேநீ

சிங்கையாற்றுக் கரையோரம் சின்னமென நிற்கின்றாய்

எங்கிருந்து வந்தாலும் எவ்வினத்தைச் சார்ந்தாலும்

இங்கிருக்கும் மக்களோடு இணைந்துவாழச் செய்கின்றாய்

 

பொங்குகின்ற புகழோடு புண்ணியமும் பெற்றவளே!

மங்குமொளி யில்லாத மகத்துவத்தில் திளைப்பவளே!

செங்கதிரோன் தோன்றுமுன்னே செய்வினையைத்  துவங்கினாலும்

பங்கமின்றிப் பழுதின்றிப் பணியினையே முடிக்கின்றாய்.

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

தீபாங்கள் பேசும்” – அக்டோபர் 2025 - 305

(எண்சீர் விருத்தம்) முதல் பரிசு

துலையென்னும் தூயதமிழ் மாதம் தன்னில்

தேய்பிறையும் தேய்ந்துவந்த அருவ மின்றித்

தொலைந்திருக்கும் இரவுநேரத்  துருவநாளில்

தொன்றுதொட்டுத் தொடர்கின்ற பழக்க மாகத்

தலையினிலும் மேனியிலு மெண்ணெ யிட்டுத்

தண்நீரில் தலைமுழுகிக் குளித்த பின்னே

நிலைமாட விளக்கேற்றி வணங்கி நிற்க

நிறைவரிசைத் தீபங்கள் நிறைவாய்ப் பேசும்

 

காத்தருளும் கடவுளாகக் கண்முன் தோன்றிக்

கைபிடித்து வழிநடத்தும் முன்னோர் தம்மை

மூத்தோரும் இளையோரும் ஒன்று கூடி

முறையாகப் பக்தியோடு போற்று கின்ற

சாத்திரத்தின் வழியினிலே  சந்தம் கூட்டிச்

சங்கல்பம் கழிக்கின்ற நன்னாள் தன்னில்

பூத்துள்ள பூவாலே பூசை செய்யப்

புத்தொளியில் தீபங்கள் புதிதாய்ப் பேசும்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 

எரியும் இரவுகள்” – செப்டம்பர் 2025 - 304

(அறுசீர் விருத்தம்) மூன்றாம் பரிசு

எரியும் இரவுச் சூரியனாய்

                              எங்கும் ஒளிரும் மின்விளக்கில்

விரையும் பொழுது விடிந்தாலும்

                              விடிந்த பொழுது கரைந்தாலும்

குறைந்த வெளிச்ச வானத்தில்

                              கடிதாய் முளைக்கும் விண்மீன்போல்

உறைந்து கிடக்கும் உள்ளத்தில்

                              ஊமை சொற்கள்  பலவாகும்

 

எல்லை யில்லா இன்பத்தை

                              என்றும் உன்னுள் கொண்டவளே!

தொல்லை கொண்ட  துன்பத்தைத்

                              தொலைவில் விட்டு வளர்ந்தவளே!

வள்ளம் போலச் சுழன்றாடும்

                              வாழ்வில் சிக்கித் தவித்தாலும்

வெல்ல மன்ன சுவையாக

                              வெளியே நீயும் சிரிக்கின்றாய்!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 

அழகின் வயது அறுபது

(வெண்பா)

அறுபத்து ஐந்தில் அடியெடுத்து வைத்து

இருபத்து ஐந்தில் மணிவிழா வென்னும்

பெருமைமிகு பேற்றியினைப் பெற்றவளே! சிங்கைப்

பெருமகளே! வாழ்கவாழ்க வே!

 

(அறுசீர் விருத்தம்)

மழலை கொண்ட உன்னுருவம்

                              மறைந்தும் மறையா பருவமுடன்  

நிழலாய்த் தொடர்ந்து வந்தாலும்

                              நித்தம் எமக்கு உயர்வூட்டும்

பழக்கம் தன்னை மாற்றாமல்

                              பணிவைப் பண்பாய்க் கொண்டிலங்கும்

அழகின் அகவை அறுபதென்று

                              ஆசை யோடு ஆர்ப்பரிப்போம்

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

அழகின் வயது அறுபது” – ஆகஸ்ட்டு 2025 - 303

(எண்சீர் விருத்தம்) முதல் பரிசு

ஆயிரத்துத் தொள்ளாயி ரத்தறுபத் தைந்தில்

அச்சமின்றி அடியெடுத்து வைத்தவளே! சிங்கைப்

பாயிரத்தில் பழங்கதையை விட்டொழித்து நீயும்

பல்லினத்தின் ஒற்றுமைதனை முதலீடாய்க் கொண்டாய்!

கோயிலெனக் கொள்வோர்க்குக் கோபுரமாய் நின்று

குறையில்லாப் பேரொளியில் பேதமையைத் தீர்த்தாய்!

வாயிலென நுழைந்தோர்க்கு நல்வழியென வந்து

வருமையில்லா வாழ்வுதனை வண்ணமுடன் தந்தாய்!

 

அளவில்லா முதலீடை அங்கமெல்லாம் பூட்டி

அவணியிலே அனைவருக்கும் அடைக்கலம்தான் தந்தாய்!

வளம்கொழிக்கும் வர்த்தகத்தில் வானளவாய் உயர்ந்து

வந்தோர்க்கும் சென்றோர்க்கும் நிழல்மரமாய் நின்றாய்!

உளம்மகிழ உலாவருவோர் உன்னழகைக் கண்டு

உரைப்பதற்கு வார்த்தையின்றி ஊமையென நிற்க

விளம்பரங்கள்  உன்னகவை அறுபதென்று  சொல்லி

விதவிதமாய்க் கொட்டிடுதே வாழ்த்துகளை அள்ளி.

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

எதை நான் கேட்பின்” – ஜூலை 2025 - 302

(அறுசீர் விருத்தம்) இரண்டாம் பரிசு

 

இன்புறும் உள்ளம் தன்னில்

எழுந்திடும் எண்ணம் கொண்டு

புன்னகை பூக்கும் வண்ணம்

பொலிவினைக் காட்டும் பெண்ணே

என்னிடம் காதல் கொண்டு

எழிலுறச் செய்யும் நாளில்

உன்னிடம் எதைநான் கேட்பின்?

உறவினை மேன்மை செய்வாய்.

 

வியப்புறும் விந்தை தன்னை

விழியிலே ஒளித்து வைத்து

இயல்புடன் பார்க்கும் பார்வை

இன்முகம் எடுத்துக் காட்ட

நயம்பட நவிழும் வார்த்தை

நறுமணம் கொள்ளச் செய்து

இயங்கிடும் வேளை தன்னில்

எதைநான் கேட்பின்? ஈவாய்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

அப்பா” – ஜூன் 2025 - 301

                              (வெண்பா)

இல்லறத்தின் மாண்புதனைக் கொண்டொழுகி வாழ்ந்தாலும்

சொல்லுகின்ற சொல்லிலும் செய்யும் செயலிலும்

நல்லறத்தை யுட்புகுத்தி நாளைய சந்ததிக்கும்

நல்வினை யாற்றுவார் காண்!

 

நெடுங்கால மாற்றும் பணியினை யேற்றுக்

கடுந்துயர் கொள்வதற்கு நேர்ந்தாலும் நெஞ்சம்

படும்பாட்டை யின்னலென எண்ணாது நாளும்

துடிப்புட னாற்றுவார் காண்!

 

தனித்துவத்தின் தன்மையிலே பண்புகளைக் கொண்டு

கனிவோடு கண்டிப்பும் காட்டுகின்ற போதும்

பனிபோன்ற பார்வையாலே மென்மையினைக் கூட்டி

இனிதெனவே வாழ்ந்திடுவார் காண்!

 

தோள்நோகத் தூக்கித் தொலைதூரம் சென்றாலும்

கோள்சுழலும் வித்தையினால் பூமி நிலைமாறி

வாள்சுழன்ற வீரக் கதைகளைக் காட்சியாக (யாக்கி)

நாள்தோறும் சொல்லிடுவார் கேள்!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

காற்றுக் கென்ன வேலி” – மே 2025 - 300

                              (அறுசீர் விருத்தம்) மூன்றாம் பரிசு

சேற்றில் நின்று உழைப்பவர்கள்

                              செய்யும் தொழிலே உயர்வென்று

ஏற்றத் தாலே நீர்பாய்ச்சி

                              எருது கொண்டு ஏருழுது

நாற்றுப் பிடிங்கி நடவுசெய்து

                              நான்கு மாதம் காத்திருந்து

மாற்று போன்ற நெல்மணியை

                              மகிழ்ச்சி யோடு பெற்றவரும்

 

ஏற்றத் தாழ்வு பார்க்காது

                              எதிலும் விரிசல் கொள்ளாது

வேற்றுக் கிரகம் சென்றவரும்

                              விதியை வென்று நின்றவரும்

நேற்று மின்றும் நெஞ்சொடு

                              நிலைத்து விட்ட பண்பாட்டுக்

காற்றுக் கில்லை வேலியென்று

                              கடிதே யுரைப்பர் எந்நாளும்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

 

வியாழன், 8 மே, 2025

 

கவிராசன் இலக்கியக் கழகம் & நம் உரத்த சிந்தனை நடத்தும்

விருத்தப்பா போட்டி 2025

அன்பொன்றே! வழியென்று காட்டு!

 

பெண்ணென்றும் ஆணென்றும் பேதமைக ளின்றிப்

பெற்றெடுத்தத் தாயுள்ளம் பேருவகை கொள்ளும்

எண்ணத்தி லுதித்திட்ட ஏடில்லாப் பாட்டில்

இன்தமிழின் இலக்கணங்கள் இசையோடு துள்ளும்

கண்ணென்றும் மணியென்றும் களிப்புடனே கொஞ்சி

காட்டுகின்ற பாசமதை கவிமொழிகள் சொல்லும்

பண்பாட்டி லக்கியங்கள் பகர்கின்ற கூற்றில்

பண்பட்ட அன்பொன்றே வழியென்று காட்டும்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்