வெள்ளி, 4 ஜூன், 2021

நாள் : 23 (23/04/2021)

தலைப்பு : நான் இல்லா உலகில்

 

பரிதியென்றும் பகலவ னென்றும் பலர்போற்றும்

பல்பெயர்கள் பாரினில் பாங்கா யெனக்குண்டு

அரிதான ஆளுமை யோடு அளவில்லா

ஆக்கங்கள் செய்திடும் திறமை யெனக்குளுண்டு

பெரிதான வெளிதனில் பரவும் ஒளிகொண்டு

புத்தெழுச்சி யூட்டிடும் புதுமை செய்வதுண்டு

நெறியான முறையினில் நின்று கோலோச்சும்

நானில்லா வுலகினி லெதுவும் நிலைப்பதில்லை

 

சனிவியாழன் துணைவளி மண்டலக் கோள்களுடன்

சஞ்சாரம் செய்திடு மெந்தன் குடும்பத்தின்  

பனிப்பெருங்கோள் நெப்டியூன் யுரேனஸ் கோள்களையும்

புவிநிகர்செவ் வாய்ப்புதன் பூமி வெள்ளியையும்

கணித்ததோரு தொலைவினில் கணாக்காய்ச் சுழலவிட்டுக்

காலத்தை நகர்த்திடும் செயல்தான் செய்தாலும் 

தனித்ததொரு தலைமையா யியங்கி வழிநடத்தும்

தகைமையெனும் ஆற்றலை யென்றும் பெற்றிடுவேன்

 

கனிவான பார்வையில் காட்சி தந்தாலும்

கனல்வீசும் பார்வையும் கொண்டு சுட்டிடுவேன்

நனிப்பார்வை கொண்டுநான் நகர்ந்து சென்றாலும்

நானிலத்தார் வாழ்ந்திட நன்மை புரிந்திடுவேன்   

தனித்தன்மை கொண்டுமே தரணி திகழ்ந்தாலும்

தன்னொளியில் நிலமதைச் செழிக்கச் செய்திடுவேன்

பனிப்போல் குளிர்ந்திட ஒளிரும் பால்நிலவைப்

பகல்போல மின்னிட வேண்டி மறைந்திடுவேன்

 

கனிந்தபழம் நிறத்தினை உடையாய்ப் போர்த்திவந்து

காலைநேரப் பொழுதினைத் துலக்கி யெதிரொளிப்பேன்

பனிபடர்ந்த பசுமலை யெங்கும் பட்டொளியைப்

பரப்பிடவே பெருங்கதிர் வீச்சை வீசிடுவேன்

நுனிப்புல்லின் பனியினை நுகர்ந்து சென்றாலும்

நிறையேரி குளம்கடல் நீரினை யுறிஞ்சிடுவேன்

நனிப்பொழுதை நலமுடன் கொடுத்து மகிழ்வதற்கும்

நானில்லா வுலகினில் யாதும் நடப்பதில்லை

 

கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக