செவ்வாய், 27 செப்டம்பர், 2016


மு. வரதராசனாரின்

கலைச் செல்வங்கள்



முன்னுரை

      மு.வரதராசனார் வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் 1912 ஆம் ஆண்டு முனியசாமி, அம்மாக்கண்ணு தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் திருப்பத்தூரில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். பதினாறாம் வயதில் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியேற்றார். ஈளை நோயின் காரணமாக அப்பணியிலிருந்து விலகினார்.

      பின்பு, திருப்பத்தூரில் முருகையா முதலியாரிடம் தமிழ் பயின்று 1935-இல் வித்வான் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். திருப்பத்தூரில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். சர்.ஆ. இலக்குமணசாமி முதலியார் இவரைப் பச்சையப்பன் கல்லூரியில் பயிற்றாசிரியராகப் பணியேற்கச் செய்தார். 1947இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றார். தமிழ்த்துறையில் முதன்முதலாகப் பி.எச்.டி பட்டம் பெற்றவர் இவரே ஆவார். 1961ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர், மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானார். தமிழக வரலாற்றுக் குழு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

      அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். பட்டம் பெற்ற தமிழறிஞர் டாக்டர் மு.வ. ஒருவரேயாவார். மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும்பொழுது நெஞ்சடைப்பு நோயால் தாக்கப்பட்டு 10.10.1974 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

      மு.வ. முதன்முதலில் குழந்தைப் பாட்டுகள் என்னும் நூல் எழுதினார். அதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்குரிய சிறுகதைகள் எழுதினார்.  பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும்பொழுது மொழிவரலாறு, மொழிநூல், இலக்கிய மரபு, இலக்கியத் திறன் போன்ற நூல்களை வெளியிட்டார். அவர் எழுதி 1945 இல் வெளிவந்த திருக்குறள் தெளிவுரை தமிழ்நாட்டில் மிக அதிகமாக விற்பனையான நூல்களுள் ஒன்றாகும்.

      இவர் எழுதிய புதினங்களில் கள்ளோ? காவியமோ?, பெற்ற மனம், அல்லி, மலர்விழி, செந்தாமரை, நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். காந்தி அண்ணல், அறிஞர் பெர்னாட்ஷா, கவிஞர் தாகூர் போன்ற வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். இவரது ஓவச்செய்தி, கொங்குதேர் வாழ்க்கை, நற்றிணைச் செல்வம் போன்ற நூல்கள் செம்மாந்த நடையில் அமைந்துள்ளவை. மேலும், இவர் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளில் சில நம் சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு நாளிதழிலும் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் கலைச்செல்வங்கள் என்னும் கட்டுரை ஆகும். குறிப்பாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அரிதான காலத்தில் இந்தச் சிங்கை நாட்டில் வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் 1958 ஆம் ஆண்டிலேயே இக்கட்டுரை வெளிவந்துள்ளதை எண்ணும்போது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இக்கட்டுரை பற்றிக் கூறுவதே இவ்வாய்வு.

கலை தோற்றமும் வளர்ச்சியும்

      டாக்டர் மு.வ. அவர்கள் இக்கட்டுரையில் கலை எவ்வாறு தோற்றம் கொள்கிறது என்பதை மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார். குறிப்பாக, ஒருவர் காட்டிலோ, மேட்டிலோ, கிழக்கு வானிலோ, மேற்கு வானிலோ தாம் கண்ட ஒரு புதிய காட்சியைப் பிறருக்கு உணர்த்தி மன அமைதியடைவார். இதைப் போலவே சிறுவர், சிறுமிகள் முதன்முதலில் தாம் வரைந்த படத்தையோ அல்லது மாக்கோலத்தையோ பிறருக்குக் காட்டி மகிழ்வார்கள். அது, அவர்களுடைய மனத்திற்குப் புதிய அனுபவத்தையும் திறனையும் கொடுக்கிறது. இவர்களுக்கே இப்படியென்றால், புதிய உணர்வும் கற்பனை வளமும் கூடிய கலைநயம் பொருந்தியவர்கள் இவர்களை விட ஒருபடி மேல் சென்று கூடுதலாகத் திறனைப் பெறுகிறார்கள். இத்தகைய திறன்களின் வெளிப்பாடே கலையாக மாறுகிறது என்கிறார்.

அதாவது, கலை என்பது திறன்களின் வெளிப்பாட்டால் ஒரு மனிதனின் சுய அனுபவத்தையும் கற்பனையையும் வளர்க்கும் ஆற்றல் பொருந்தியதாக இருக்கிறது என்று கூறுகிறார். இத்தகைய புதிய அனுபவமும் கற்பனை வளமும் கொண்ட கலை எவ்வாறெல்லாம் பரந்து விரிந்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன என்பதையும் விளக்கியுள்ளார்.

பிறருக்கு உணர்த்தி உணர்த்தித் தாமும் பயின்றும் பயிற்றுவித்தும் வரும் கலைநயம் பொருந்தியவர்களின் கலைத்திறன் பண்படப் பண்பட அவர்களுக்குப் புதுப்புதுக் கலைகளை உருவாக்கும் ஆற்றலும், அதைப் பிறருக்கு உணர்த்தும் ஆற்றலும் வளர்கின்றது என்று மு.வ. கூறுகிறார்.

மேலும், உணர்வும் கற்பனையும் அமைவதற்குக் கலை காரணமாகின்றது; இத்தகைய கலைத்திறன் இல்லையெனில் கலைஞர்களுக்கு ஆழ்ந்த அனுபவங்களும், அவற்றைப் பிறருக்கு உணர்த்தும் ஆற்றலும் இல்லையென்கிறார். சுருங்கக் கூறவேண்டுமெனில் கலை என்பது முதலில் ஒருவரால் படைக்கப்பெற்று அப்படைப்பைப் பார்ப்பவர், படிப்பவர், சுவைப்பவர் என்று பலருடைய உள்ளத்திலும் அதே அனுபவத்தை உண்டாக்கி வாழ்கிறது என்று மு.வ. கூறுகிறார். இதனை வலியுறுத்த, கட்டுரையில்
 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
         காமுறுவர் கற்றறிந் தார் என்ற குறட்பாவையும்
        யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சான்றோர் ஒருவரின் மணிமொழியையும் பயன்படுத்தியிருப்பது அவருடைய நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது.

கலைகளின்  வகைகளும் அதன் தன்மைகளும்

      அனுபவத்தின் வெளிப்பாடான கலை பற்றியும் அதன் திறன் பற்றியும் கூறிய மு. வ. அவர்கள், அக்கலை எவ்வாறு பல நிலைகளில் வடிவம் பெறுகிறது என்பது பற்றியும் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். அதாவது, கண்ணுக்கு விருந்தாகும் ஓவியக்கலை கீற்றாகவோ அல்லது வண்ணமாகவோ வடிவம் பெறுகிறது. இக்கலை அகலமும் நீளமும் ஆகிய இருதன்மைகளை மட்டும் பெறும் என்கிறார். ஆனால் வண்ணம் பெற்றோ, பெறாமலோ பார்ப்பதற்கும், தொட்டு உணர்வதற்கும் ஏற்ற வகையில் அமைவது சிற்பக்கலை. இக்கலை நீளமும், அகலமும், கனமும் ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டது என்கிறார்.

      மேலும், ஒலிகள் ஒழுங்காக அமைந்து இன்பம் தருவது இசைக்கலை. இது செவிப் புலனுக்குரிய கலை. இக்கலையில் அமைகின்ற ஒலிகள் பொருளுடையனவாக வெளிப்படுமானால் அது பாட்டுக் கலையாகும். இசையும் பாட்டும் இணைந்து உணர்ச்சிகளுக்குக் கையசைவாலும், முகக்குறிப்புகளாலும் வடிவம் தருவது நடனக் கலையாகும். இக்கலை கண்ணுக்கும், செவிக்கும் இன்பம் தரக்கூடிய கலையாகும். புறக்கண்ணுக்கும் புறச்செவிக்கும் மட்டும் இன்பம் தராமல் அகக் கண்ணுக்கும் அகச் செவிக்கும் உரித்தான மனத்திற்கு இன்பம் தருவதாக அமைவது கதை என்னும் கலையாகும். இக்கலை பாட்டுபோல் ஒலிநயம் இல்லாமல் சொற்கோவையாக அமைவதாகும். மேற்குறித்த பல கலைகளும் இணைந்து கண்ணுக்கும் செவிக்கும் மனத்திற்கும் ஒருங்கே இன்பம் தருவது நாடகக் கலையாகும் என்கிறார்.

இக்கலைகள் எல்லாவற்றிற்கும் புலன்களின் நுட்பமான வளர்ச்சியும், வடிவங்களின் அழகிய அமைப்பும் இன்றியமையாதது என்கிறார். அதுமட்டுமல்ல, புலன் நுட்பமும் அழகிய வடிவமும் தரவல்லவராய் இருப்பவரே கலையைப் படைப்பவராவார். மேலும், இயற்கை உணர்வினாலும் பயிற்சியினாலும் கலையை உணர்ந்து போற்றி அக்கலையையும் படைக்கும் கலைஞரின் அனுபவத்தையும் பெறுபவரே கலையை நுகர்பவர் என்கிறார்.

கலை படைப்பும் வேறுபாடும்

      முனைவர் மு. வரதராசனார், மேற்கூறிய பத்திகளில் கலைகள் எவ்வாறு தோற்றம் கொள்கின்றன? அதன் பண்புகள் என்ன? அவற்றின் வகைகள் என்ன? என்பன பற்றியும் அவை எவ்வெவற்றிற்கெல்லாம் நுட்புலனாகின்றன என்பது பற்றியும் கூறியுள்ளார். அடுத்ததாக அவர் அந்தக் கலைகளை எவ்வாறெல்லாம் படைக்கலாம் அல்லது படைத்துக் காட்ட முடியும் என்பதை உருவமாக்குகிறார்.

உதாரணமாக, ஒருவர் குளிர்காலத்தில் காட்டு வழியே செல்லும் போது அக்காட்டில் ஒரு மயில் தன் அழகிய தோகையை விரித்து ஆடுகிறது. அக்காட்சி அவர் உள்ளத்திற்கு இன்பத்தைத் தருகிறது. அவ்வின்பத்தில் தன் மனத்தைப் பறிகொடுப்பார். அவர் கலைத்திறன் இல்லாதவரானால் தாம் கண்ட காட்சியைப் பெற்ற இன்பத்தை வெறும் பேச்சாக எடுத்துரைப்பார். ஆனால் அவரே கலைத்திறன் பெற்றவராக இருந்தால் காகிதத்தாலோ அல்லது துணியினாலோ ஓவியமாகத் தீட்டிக் காட்டி மகிழச் செய்வார். அவரே சிற்பத்திறன் உடையவராக இருந்தால் மண்ணிலோ மரத்திலோ கல்லிலோ உலோகத்திலோ சிற்பமாக வடித்து அதன் அழகையும் உருவத்தையும் படைத்துக் காட்டுவார். இசைக் கலைஞனாக இருந்தால் மயில் ஆடும்போது எழுப்பிய ஒலியைத் தன் இசையின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவார். தம் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளுக்குச் சொல்வடிவம் தரும் கவிஞனாக இருந்தால் மயிலின் அழகையும் ஆடலையும் வெளிப்படுத்தும் வகையில் கவிதை இயற்றுவார்.

      இவ்வாறு மயில் என்ற ஓர் உயிர்ப் பொருளிடத்தே பெறுகின்ற அனுபவத்தைப் பார்ப்பவர் அவரவர் திறமைக்கும் பயிற்சிக்கும் ஏற்ற வகையில் கலைவடிவம் தந்து படைக்கிறார்கள் என்கிறார். பயிற்சியும் திறனும் வேறுபடுவதால்தான் கலையும் வேறுபடுகிறது. அதாவது, கலையின் அனுபவத்திலும் அதனைப் படைப்பதிலும் அதனை உண்டாக்கும் வடிவங்களிலும் ஏற்படுகிறது என்கிறார்.

கலையின் பொதுப்பண்புகளும் வெளிப்பாடும்.

மேலும், அவர் இத்தனை வேறுபாடுகளுக்கும் அடிப்படைப் பொதுப் பண்புகளான உணர்வுகள், கற்பனை, ஆர்வம் போன்ற மூன்றுமே எல்லோருக்கும் இயல்பாகவே உள்ளன என்கிறார். இருப்பினும், பெரும்பான்மையோருக்கு இம்மூன்றும் குறுகிய நிலையில் நின்று மறைகின்றன.

இதனை உணர்த்தவரும் மு.வ. அவர்கள் ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான பழங்கள் இருந்தாலும் அதில் கோடிக்கணக்கான விதைகள் இருந்தாலும் ஒருசில விதைகளே மீண்டும் மரங்களாகிப் பயன்தருகின்றன. அதேபோல் இந்த நீண்ட நெடிய பரப்பையுடைய உலகத்தில் உணர்வும், கற்பனையும், ஆர்வமும் வித்துகள் போல் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கின்றன. ஆனால், ஒரு சிலருடைய உள்ளத்தில் உள்ள அந்த வித்துகள் மட்டுமே முளைத்து எழுந்து மரங்களாய் வளர்ந்து கலைச்செல்வங்கள் என்னும் பழமாய்ப் பயன் தருகின்றன. அத்தகைய உள்ளம் பெற்றவர்களே கலைஞர்கள் என்கிறார். அதாவது, ஆலின் விதை மரமானபின் கோடிக்கணக்கான விதைகளைத் தருவதுபோல் கலைஞரின் அனுபவம் என்னும் வித்து கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் அதே அனுபவத்தை விளைவிக்கக் கூடியதாகிறது என்கிறார்.

மு.வ.வின் உத்தி

      டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம் கட்டுரையில் மனிதன் உள்ளத்தில் எழும் அனுபவத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான கவிதைக் கலையின் இயல்பை ஒருசில சங்க இலக்கியப் பாடல்களின் மூலம் நமக்கு வெளிப்படுத்தும் உத்தியாக எடுத்தாண்டுள்ளார்.

அதாவது, ஒரு புலவர் தாம் கண்ட காட்சியின் இன்பத்தை அல்லது அனுபவத்தைப் பிறருக்குக் கூறவேண்டும் என்றால், அதனை ஒருசில சொற்களிலேயே படிப்பவர் மனதில் பதியும்படி உணர்த்தலாம். அதை விடுத்து விரிவாக உணர்த்துகிறேன் என்று படிப்பவர்க்குச் சலிப்புத் தட்டும் வகையில் கூறக் கூடாது என்கிறார். இந்தக் கருத்தை நமக்கு உணர்த்த முயலின் உருவத்தையும் பெண்ணின் அழகையும் உணர்வையும் குரங்கின் செயலையும் அரசியின் கோபத்தையும் வெளிப்படுத்தும் அழகிய பாடல்களை எடுத்து விளக்கியிருப்பது சிறந்த உத்தியாகும்.

உருவக் கற்பனை
காட்டில் முயலைக் காணும் புலவர் ஒருவர் அதன் உருவத்தையும் அழகையும் ஒருசில சொற்களைக் கொண்டு நமக்கு உணர்த்த விரும்புகிறார். இதனை,  
தூ மயிர்க் குறுந்தாள்
நெடுஞ்செவிக் குறுமுயல் எனப் பாடுகிறார். இவரது சொல்லோவியத்தில் முயலின் முழு உருவமும் வர்ணிக்கப்படவில்லை. ஆனால், தம் உள்ளத்தைக் கவர்ந்த சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டு அதாவது தூய்மையான மயிரும், சிறுகால்களும், நீண்ட காதுகளும் உடைய சிறிய முயல் என்று நம் கண் முன்னே முயலைத் தாவவிடுகிறார். இத்தகைய சிறந்த பகுதிகளை மட்டுமே கூறுவதற்குக் கற்பனை முக்கியமானது. அக்கற்பனையே படைப்புக் கற்பனை என்கிறார் மு. வரதராசனார்.

வர்ணனைக் கற்பனை

      மற்றொரு புலவரோ பெண்களின் அழகை வர்ணிக்கும்போது பாதாதிகேச வர்ணனையோ, கேசாதிபாத வர்ணனையோ செய்யாமல் குறிப்பிட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்தே வர்ணிக்கிறார். எடுத்துக்காட்டாக,
பசும்பழம் பலவு கனவ இலை அடும்பு
பகுவாய்ப் பல்லி பேழ்வாய் உழுவை
உரற் கால் யானை திரிகோட்டு இரலை என்று சிறுசிறு தொடர்களில் சில சொற்களையே கையாண்டுள்ளார். இதன் மூலம் அந்தப் புலவர் தாம் கண்ட பெண்ணின் அழகை நாமும் காணுமாறு செய்து உள்ளத்தில் பதிய வைக்கிறார். இத்தகைய தொடர்களால் பெறுகின்ற பயனை நீண்ட வர்ணனைப் பாடல்களில் பெற முடிவதில்லை என்று மு. வரதராசனார் கூறுகிறார்.

உணர்வுக் கற்பனை

      பெண்ணின் காதல் உணர்வை, தவிப்பைக்கூற விரும்பும் புலவர்கள் அவள் உடல் முழுவதையும் வர்ணித்து அந்த உடல் தென்றலால் தீய்வதாகவும் நிலவால் எரிவதாகவும் சந்தனத்தால் வேகுவதாகவும் கூறிப் படிக்கும் நம்மையும் புலம்ப வைப்பார்கள். ஆனால் கலைத்திறன் மிக்க புலவரோ இரண்டே அடிகளில் அவளுடைய காதல் மிகுதியையும் ஆற்றாமையையும் புலப்படுத்திவிடுவார் என்று மு.வ. கூறுகிறார். உதாரணமாக,
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு இவள்
        உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே என்று சிறுசிறு சொற்களைக் கொண்ட அடிகளில் பலா மரத்தின் சிறிய கிளைகளில் பெரிய பலாப்பழம் தொங்குவது போன்றது அவளுடைய காதல் என்னும் வாழ்க்கை. ஆனால், மென்மையான அவளுடைய உயிர் மிகச் சிறியது. அதனால் காதல் மிகுதியைத் தாங்க முடியாமல் பிரிவுக் காலத்தில் வருந்துகிறாள் என்று பெண்ணின் காதல் உணர்வையும் தவிப்பையும் உணர்த்துவதாகக் கூறுகிறார். இதனை, உணர்வுக் கற்பனை என்ற வகைக்குள் அடக்குகிறார் மு. வ.

படைப்புக் கற்பனை

      வெவ்வேறு இடத்தில் இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளைக் கண்ட கலையுள்ளம் படைத்தவர் அதனை ஒருங்குபடுத்திப் புதியதோர் கலை நுணுக்கத்தைக் காட்டுவார். அவ்வாறே ஒரு புலவர் தாம் கண்ட இரண்டு வேறு நிகழ்வுகளை ஒருங்குபடுத்தி ஒரு புதிய நிகழ்வாகத் தம் கவிதையில் கற்பனையாக்கிவிடுகிறார். அதாவது ஓர் இடத்தில் அழகான மயிலின் முட்டை கேட்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கிறது. மற்றோர் இடத்தில் ஒரு குரங்குக் குட்டி உருண்டையான ஒரு பொருளை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. இக்காட்சிகள் அப்புலவரின் நெஞ்சத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடனே தன் எழுத்துத் திறனைப் பயன்படுத்திக் கேட்பாரற்றுக் கிடந்த மயில் முட்டையை அந்த குரங்குக் குட்டி எடுத்து உருட்டி விளையாடினால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து அதனையும் கவிதையில்,
கான மஞ்ஞை அறை ஈன்முட்டை,
வெயிலாடு முசுவின் குருளை
              உருட்டும் குன்ற நாடு என்று படைக்கிறார். இப்படைப்பில் தாம் பார்த்த பலவற்றையும் பதிவு செய்யவில்லை. ஆனால் அவற்றில் தான் பார்த்த, தன் நெஞ்சைத் தொட்ட நிகழ்வை மட்டுமே ஓரிரு சொற்களில் கவிதையாக்கினார். இக்கவிதைக் கற்பனை ரசனையுடைய படைப்பாக மிளிர்கிறது. இதனைப் படைப்புக் கற்பனை என்று மு.வரதராசனார் அவர்கள் கூறுகிறார்.

இயைபுக் கற்பனை

      ஒரு நாட்டின் அரண்மனையில் எத்தனையோ நிகழ்வுகள் அன்றாடம் நடைபெறும். அந்த நிகழ்வுகளில் ஒன்று அரண்மனையில் உள்ள அரசிக்கு ஒரு நாள் கோபம் வருகிறது. அந்த கோபத்தின் வெளிப்பாடாக அங்குள்ள பணிப்பெண்களான இளநங்கையர்களைக் கடிந்து பேசுகிறாள். அக்கோபத்தைத் தணிக்கும் பொருட்டு இளநங்கையர்கள் அவளிடம் கைகூப்பிப் பணிந்து நின்றார்கள். இந்தக் காட்சியைக் கண்ட புலவரின் மனத்தில் ஒருவித எண்ண அலைகளை ஏற்படுத்துகிறது.
      சிலநாள் கழித்து அவர் ஒரு பொய்கையோரமாக நடந்து செல்கிறார். அப்போது அப்பொய்கையில் ஒரு காட்சியைப் பார்க்கிறார். அதாவது, அக்குளத்து நடுவே ஒரு பெரிய தாமரைப் பூ மலர்ந்து விளங்குகிறது. அதனைச் சுற்றி ஆம்பல் மலர்கள் குவிந்து கிடந்தன. காற்று வீசிய காரணத்தால் அவை அசைந்து அசைந்து தளர்ந்தன. அக்காட்சிப் புலவரின் உள்ளத்தில் ஒரு புதுவிதக் கற்பனையைத் தோற்றுவிக்கின்றது. அதாவது, தளர்ந்து போன ஆம்பல்களின் வாட்டமும் மலர்ந்த தாமரையின் பெருமிதமும் அரண்மனைக் காட்சியோடு ஒப்பிடப்படுகிறது. அதாவது, தாமரை மலர் அரசிபோல் பெருமிதத்தோடு நிற்க ஆம்பல்கள் இளம் தோழியர்போல் குவிந்து வாடுவதாகக் கற்பனை செய்கிறார். இதனை,
சுடர்த் தொடிக் கோமகள், சினந்தென அதனெதிர்
மடந்தகை ஆயம் கைதொழு தாஅங்கு
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
               தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை என்ற பாடல் வழி அறியலாம்.  இக்கற்பனையை இயைபுக் கற்பனை என்று மு.வரதராசனார் அவர்கள் கூறுகிறார்.

கருத்து விளக்கக் கற்பனை

      மற்றொரு புலவர் உலகில் பிறப்பும் இறப்பும், கேடும் ஆக்கமும் மாறி மாறி வருவதைக் காண்கிறார். இதனை வலியுறுத்த நிலவின் வாழ்வோடு ஒப்பிட்டுக் கற்பனை செய்கிறார். அதாவது இரவில் வானத்தில் தோன்றும் நிலவினை உற்றுப் பார்க்கிறார். அந்த நிலவின் வாழ்விலும் பிறப்பும் இறப்பும், கேடும் ஆக்கமும் இருப்பதைக் காண்கிறார். இக்காட்சி மக்களில் சிலர் தம் வாழ்வின் இயல்பையும் சிறப்பையும் உணராமல் இருப்பதைக் காட்டுகின்றது. அவர்களும் உணரும் வகையில்தான் இந்த நிலவு வானத்தில் திரிவதாக எண்ணி, மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
         அறியா தோரையும் அறியக்காட்டித்
         திங்கட் புத்தேள் திரிதரும் என்று பாடுகிறார். உண்மையில் நிலவு வானத்தில் திரியவும் இல்லை அது உலகத்தார்க்கு உணர்த்தவும் இல்லை. இவ்வுண்மை நிலவுக்கும் தெரியாது. இருப்பினும் இயல்பாக நிகழும் ஒன்றை இப்படி மக்கள் வாழ்வோடு ஒப்பிட்டுப் பாடுவது அவரது கற்பனைத் திறனை வெளிப்படுத்துவதோடு மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை உணர்த்துவதற்காகவே என்று மு.வரதராசனார் அவர்கள் கூறுகிறார். மேலும், இவ்வாறு ஒப்பிடும் கற்பனையைக் கருத்து விளக்கக் கற்பனை என்றும் கூறுவார்.

முடிவுரை

      இவ்வாறாகக் கலைகள் பற்றியும் அவற்றின் தன்மைகள் பற்றியும் புலவர்களின் உள்ளத்தில் உருவெடுத்த கவிதை வரிகளுக்கு ஏற்றாற்போல கற்பனைகளை வகைப்படுத்திக் கற்போர் நெஞ்சங்களைக் கழிபேருவகை அடையச் செய்கிறார். கடினத்தை எளிமைப் படுத்துவதில் கைதேர்ந்தவர் மு.வ என்பது அவரது கலைச்செல்வங்கள் என்னும் கட்டுரையில் நன்கு புலனாகின்றது.
      அரிய கற்பனைகளில் ஆழ்ந்து மகிழ்ந்த புலவர்கள், அதனைப் பிறரும் படித்து இன்புற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதனைத் தம் பாடல்களின் வழி புகுத்திச் சென்றுள்ளனர். இதனைப் போன்ற இன்னும் எத்தனையோ படைப்புச் செல்வங்களை விட்டுச் சென்றுள்ளனர். இச்செல்வங்களே கலைச் செல்வங்கள் என்றால் மிகையாகாது. இத்தகைய செல்வங்களில் சிலவற்றை நமக்கு இக்கட்டுரை வழி படித்து இன்புறுவதற்குத் தம் இனிய, எளிய சொல்திறத்தால் எடுத்து விளக்கிய மு.வரதராசனார் அவர்களின் உள்ளத்தை நாம் இந்நூற்றாண்டு மட்டுமல்ல என்றென்றும் போற்றுவோமாக!


கட்டுரை எழுத துணை நின்ற நூல்


1.   தமிழ்முரசு “ஆண்டுமலர்” - 1958 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.

கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக