ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 17 (30.05.2020)

'ஏணியைச் சுமக்கும் மின்தூக்கி'

ஏணி போல ஏற்றிவிட்டு
இருக்கும் இடத்தில் இருந்தாலும்
தோணி போலச் சுமந்துசென்று
தொலைவில் கரையில் சேர்த்தாலும்
ஞானி போலப் போதனைகள்
நாளும் புதிதாய்ச் சொன்னாலும்
தேனி போலச் சுறுசுறுப்பாய்த்
தினமும் தேனைச் சேர்த்தாலும்

மாற்றார் மகிழும் மனத்தினிலே
மமதை யென்றும் தோன்றாமல்
ஊற்றில் ஊறும் நீரைப்போல்
உள்ளுள் ஊறும் அன்பிற்கும்
மாற்றம் நிறைந்த வாழ்விற்கும்
மறுகித் தவித்த எளியோர்மேல்
ஏற்றம் வந்து சேர்ந்தாலும்
எந்த மதிப்பும் குறையாது

கால மாற்றம் வந்ததால்
காற்றா யேற்றும் மின்தூக்கி
காலால் ஏறும் உயரத்தை
கடக்க உதவும் ஏணிபோல
பாலும் தோளும்  தந்தென்னை
பரிவாய் வளர்த்த பெற்றோர்க்கு
காலம் முழுதும் வழிகாட்டும்
கண்ணா யென்றும் துலங்கிடுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக