புதன், 6 மே, 2015

தனிமை
விண்ணிருந்து வீழுகின்ற விரிசுடரின் ஒளியினிலே
வண்ணமயக் காட்சிகளும் வகைவகையாய் வடித்திருக்க
கண்ணிருந்தும் குருடாகக் காதிருந்தும் செவிடாக
எண்ணிறைந்தோர் ரசிப்பின்றி இருப்பதுவோ தனிமை!

உற்றவரும் பெற்றவரும் உறவாடி நின்றாலும்
கற்றவரும் மற்றவரும் கதைபேசி மகிழ்ந்தாலும்
வற்றாத அன்பைத்தான் வாரிவாரி தந்தாலும்
பற்றில்லா இன்பத்தின் பரிசாகும் தனிமை!

உய்வான வாழ்வுதனை ஒருபொழுதும் வாழாமல்
பொய்யான காயத்தைப் பூமியிலே உழலவிட்டு
மெய்யென்று மெச்சுகின்ற மேதாவி கூட்டத்தில்
பெயல்நீராய்க் கலக்காமல் பிரித்திடுமே தனிமை!

வந்தவரும் போனவரும் நாளெல்லாம் இருப்பவரும்
இந்தவேலை அந்தவேலை எந்தவேலை என்றாலும்
சொந்தவேலை என்றெண்ணிச் சுருக்குடனே முடிப்பவரும்
அந்திநேரம் அடைகின்ற மகிழ்வுதானே தனிமை!

சொந்தமுண்டு பந்தமுண்டு சோர்வில்லா வாழ்க்கையுண்டு
வெந்தசோறு நித்தமுண்டு விதவிதமாய் பண்டமுண்டு
இந்தசுகம் அத்தனையும் நம்மைவிட்டுப் போனாலும்
முந்திவந்து உள்ளமெங்கும் நாடிடுமே தனிமை!
கணேசுகுமார் பொன்னழகு,
சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக