புதன், 6 மே, 2015

அட்சயத்தின் அன்னமென...

செழுந்தமிழால் நிறைந்திட்ட சிந்தையோடு
      சிறப்பாகச் செய்ந்நன்றி செய்திடவே
எழுகின்ற ஞாயிற்றின் ஒளிபோல
      ஏற்றமுடன் தைப்பாவை வருகின்றாள்
உழுதுண்டு வாழ்கின்ற உழவரையும்
      உறுதுணையாய் இருக்கின்ற ஞாயிற்றையும்
தொழுதுண்டு நலம்பெறவே தைப்பாவை
துடிப்புடனே புத்தாண்டாய் வருகின்றாள்

தமிழன்னை கொழுவிற்கும் கோவிலிலே
      தங்கமென ஒளிவீசும் தைப்பாவை
தமிழாண்டின் தலைமகளாய்த் தரணியெங்கும்
      தாழ்பதித்து நடனமாடி வருகின்றாள்
தமிழ்மொழியின் சிறப்பெய்தும் பெட்டகத்தில்
      தரமான இலக்கணங்கள் இலக்கியங்கள்
அமிழ்தமாய் அங்கமெல்லாம் அணிந்துவந்து
      அவனியிலே அற்புதம்தான் செய்கின்றாள்

கோபுரத்துக் கலசமென நெடிதுயர்ந்து
      கொழுவிருக்கும் கோமகளாம் தைப்பாவை
ஆபரணமாய்ச் சூட்டிவரும் அருந்தமிழால்
      அண்டமெல்லாம் அலங்கரிக்க வைக்கின்றாள்
நூபுரத்து ஒலியோடு நுண்மையுமாய்
      நுவல்கின்ற செந்தமிழாள் தைப்பாவை
ஆபுத்திரன் கையிருந்த அட்சயத்தின்
அன்னமென அனைவருக்கும் பயன்தருவாள்
                                        கணேசுகுமார் பொன்னழகு
                                        சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக