புதன், 6 மே, 2015


அன்னை!

அன்னை! அன்னை! அன்னையவள்
      அன்பு கொண்ட அன்னையவள்
என்னை உன்னைக் காக்கின்ற
      இறைவன் போன்ற அன்னையவள்
அன்பும் அறனும் தலைத்தோங்க
அன்பை அமுதாய் ஊட்டியவள்
கண்ணே! பொன்னே! எனக்கொஞ்சி
     கன்னித் தமிழால் பாடியவள்

வாடும் பிள்ளை முகமறிந்து
வாட்டம் போக்கச் செய்திடுவாள்
ஓடும் நதியின் வேகத்தை
ஓயா செயலில் காட்டிடுவாள்
நாடும் வீடும் போற்றிடவே
நல்ல பண்பை ஊட்டிடுவாள்
வீடும் நாடும் போற்றுகின்ற
வீரக் கதைகள் சொல்லிடுவாள்

நானும் நீயும் எப்போதும்
நலமாய் வாழ வழிசெய்வாள்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வயிறு நிரம்ப வகைசெய்வாள்
ஈன்ற தாயாய் இருந்தாலும்
இவரே முதலாய் விளங்கிடுவாள்
காணும் காட்சி யாவினிலும்
கருணைக் கடலாய் தெரிந்திடுவாள்

கண்ணாய் வளர்த்தப் பிள்ளையைக்
     கட்டித் தூக்கிச் சீராட்டும்
பெண்ணை என்றும் உயர்வோடு
     போற்றிப் புகழும் நம்மினத்தில்
உண்மைத் தாயை என்றென்றும்
      உயிராய் எண்ணி வாழ்த்திடவே
கண்ணீர்த் ததும்பும் உள்ளத்தைக்
      காலில் வைத்து வணங்கிடுவோம்

                     பொன். கணேசுகுமார்,
                        சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக