புதன், 6 மே, 2015

ஆசை!

பள்ளம் பார்த்துத் தண்ணீரும்
      பாய்ந்து வருவதைப் போலவே
அல்லும் பகலும் உழைத்துமே
      அதிக வெள்ளி சேர்க்கவும்
வெள்ளிப் பணம் கட்டியே
      வீடு வாசல் வாங்கவும்
உள்ளம் எல்லாம் பொங்கியே
      உருண்டு வருது ஆசையே!

பள்ளி செல்லும் பிள்ளைகள்
      பழகும் நட்பைப் போலவும்
இல்லை என்ற சொல்லையே
      இல்லை என்று ஆக்கவும்
நல்ல உள்ளம் கொண்டுமே
      நாலு வார்த்தைப் பேசவும்
கள்ளம் இல்லா மனிதராய்க்
      களித்துப் பேச ஆசையே!

ஏழ்மை கொண்ட மக்களும்
      ஏற்றம் பெற்று வாழவே
தாழ்ந்து இருக்கும் நிலையினைத்
      தரத்தில் உயர்த்திப் பிடிக்கவும்
வீழ்ந்து கிடக்கும் வெற்றியை
      வீறு கொண்டு எழுப்பவும்
ஆழ்ந்து தெளிந்த மனத்துடன்
      அன்பு செலுத்த ஆசையே!

நல்ல நல்ல நூல்களை
      நாளும் படிக்க வேண்டியும்
உள்ளம் நிறைந்த இருளையும்
      ஒழிந்து போகச் செய்யவும்
எல்லை யில்லா புகழுடன்
      இனிய பெயரை வாங்கவும்
கல்வி கேள்வி யாவிலும்
      கற்றுத் தேர ஆசையே!

பொன். கணேசுகுமார் எம்.ஏ
சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக