புதன், 6 மே, 2015

இன்றும் சொல்வோம் வாழ்த்துகளை

எங்கள் ஐயா லீகுவான்யூ
இங்கு வந்து தோன்றியதால்
சிங்கை நகராம் நம்நாட்டை
சிகரம் போல உயர்த்திட்டார்
மங்காப் புகழை நாட்டுக்கு
மதியால் வாங்கித் தந்திடவே
சிங்கம் போன்ற ஆளுமையை
சிறப்பாய்ச் செய்தார் எந்நாளும்

ஓடும் நதியின் வேகத்தை
ஓயா செயலில் காட்டிட்டார்
காடும் மேடும் திருத்திடவே
கடின உழைப்பைக் கொடுத்திட்டார்
வாடும் ஏழை முதியோரின்
வாழ்வை மிளிர வைத்திட்டார்
நாடும் வீடும் நானிலமும்
நன்றாய் உரைக்கச் செய்திட்டார்

நானும் நீயும் சந்ததியும்
நலமாய் வாழ வழிசெய்தார்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வருவாய் வரவே வகைசெய்தார்
காணும் காட்சி யாவினிலும்
கருணைக் கடலாய் தெரிந்திடுவார்
ஈனும் தாயாய் இருப்பதிலும்
இவரே முதலாய் விளங்கிடுவார்

அன்பும் அறனும் தலைத்தோங்க
அன்றே கண்டார் நல்லிணக்கம்
ஒன்றுபட்டு வாழ்வதற்கும்
ஒருமைப் பண்பு வேண்டிட்டார்
இன்று வயது தொண்ணூறை
எட்டிப் பிடித்த லீகுவான்யூ
என்றும் இதுபோல் வாழ்ந்திடவே
இன்றும் சொல்வோம் வாழ்த்துகளை

பொன். கணேசுகுமார் எம். ஏ
சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக