எழுத்தறிவித்தவர் – செப்டம்பர் 2024
அகரத்தில்
அடியெடுத்து னகரத்தில் இறுவாகும்
அனைத்துவகை
யெழுத்துகளின் ஒலியளவு மாறாது
அகத்தினுள்ளே
பதியவைத்து அறிவோனாய் ஆக்குகின்ற
அளப்பரிய
ஆற்றலினைப் பெற்றிலங்கும் பெருந்தகையும்
மகத்தான
மறைநூல்கள் கொண்டுள்ள கருத்துகளை
மனிதத்தின்
மாண்புகளாய்க் கற்பிக்கும் அறச்செயலை
உகந்தபடி
செய்கின்ற உய்வில்லா உத்தமரும்
உலகத்தார்
போற்றுகின்ற எழுத்தறிவித் தவராவார்
எண்ணுகின்ற
எண்ணமதை எழுத்துகளில் எழுதிடவும்
எழுதியதைச்
சொல்லாக்கி எளிதாகச் சொல்லிடவும்
பண்பாட்டுப்
பழக்கமதைப் பணிவுடனே கடைப்பிடிக்கும்
பாமரரும்
பரம்பரையாய் எடுத்தியம்பித் தொடர்ந்திடவும்
கண்ணிருந்தும்
குருடராகக் காலமெல்லாம் இருக்காமல்
கல்லாரும்
வித்தைகளைக் கற்றறிந்து பகிர்ந்திடவும்
எண்கூட்டிக்
கணக்கெழுதும் சூத்திரத்தைக் கற்றிடவும்
இயம்புகின்ற
ஆசிரியர் எழுத்தறிவித் தவராவார்
திரு கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக