வியாழன், 8 மே, 2025

 

நிலந்தொடும் மழை” – நவம்பர் 2024

 

ஆறு குட்டை குளமென்றும்

                        ஆழி சூழ்ந்த பரப்பென்றும்

கூறு பட்டுக் கிடக்கின்ற

                        குவல யமென்னும் நிலப்பரப்பில்

வேறு பாடு பார்க்காமல்

                        வெய்யோன் உறிஞ்சும் நீரெல்லாம்

மாறு பட்ட மேகமென

                        மெல்ல வானம் சென்றாலும்

 

சோறு போடும் உழவனவன்

                        சொந்த வுழைப்பில் பயிர்செய்து

பேறு செய்யும் நோக்கத்தில்

                        பெரிய மழையாய்ப் பெய்யுமுன்னே

மீறு கின்ற வளிப்பட்டு

                        மின்ன லிடியாய் ஒலியெழுப்பி

தூறு கின்ற தூவானம்

                        துளித்து ளியாக நிலந்தொடுமே

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக