“தமிழணங்கே!” – ஏப்ரல் 2025
நாற்புற
மாழிசூழ் நற்சிங்கை நன்னாட்டில்
வீற்றிருந்து
வெல்லும் வினைகள் புரிகின்ற
பேற்றினைப்
பெற்றிலங்கும் செந்தமிழ ணங்கே!யுன்
கூற்றினைக்
கூறிடுவே னிங்கு
பாற்கடல்
தாண்டியும் பேசுகின்ற பைந்தமிழே!
மேற்றிசை
நாட்டிலும் மேலோங்கி நின்றிடினும்
காற்று
வழிபரவு மின்னிசையே! கானமே!
மாற்றுமறு
வற்றவள் நீ!
நூற்றாண்டு
காலமாய் நுண்ணறிவு நுட்பத்தின்
ஊற்றுவழி
யுட்கண்ணோ வுன்னுள்ளே யிருப்பதனால்
மாற்றுவழி
காண்பதோடு மாசின்றி மின்னிடவும்
தேற்றமுள்ள
தமிழானாய் நீ!
நேற்றுமுத
லின்றுவரை நீண்டதொரு காலமாகத்
தூற்றில்லாச்
செந்தமிழாய்த் தூய்மையோடு வாழ்ந்தாலும்
சாற்றுகின்ற சான்றோரும்
தக்கதொரு சன்மானம்
ஏற்பதற்கு
வித்திட்டாய் நீ!
ஆற்றுவழி
யூறுகின்ற ஊற்றின் சுனைபோலும்
சேற்றில்
விளைகின்ற செந்நெல் மணிபோலும்
நூற்றாண்டு
காலமாய் நெஞ்சினிலே நெக்குருகி
போற்றுதலுக்
குள்ளானாய் நீ!
கணேசுகுமார்
பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக