வியாழன், 8 மே, 2025

 

பௌர்ணமி புன்னகை – அக்டோபர் 2024

 

உதிக்கின்ற சூரியனைப் பூமியது சுற்ற

                  உருப்படியாய் ஓராண்டு ஆகுமெனக் கணித்தோர்

மதியென்னும் முழுநிலவு பூமியினைச் சுற்ற

                 முப்பதுநா ளாகுமென முன்னறிந்தே உரைத்தார்

கதிரொளியை உள்வாங்கி எதிரொளிக்கும் நிலவோ

                  கணிதவியல் கணக்கினிலே நாளொன்றாய் நகர்ந்தே

முதிர்வடையும் காலத்தில் பூமிமுகம் பார்த்து

                  முழுமதியாய் முகம்காட்டி முன்னின்று சிரிக்கும்

 

வான்வெளியின் மேற்றிசையில் வானவன்முன் நகர

                வயல்வெளியில் பயிரினமோ பசுந்தழையை ஆட்டும் 

வான்வீதி முகில்கூட்டம் பின்தொடர்ந்து செல்ல

                வெண்மேகம் சிவப்பேறி மெல்லமெல்ல கருக்கும்

வான்சோலை வனத்தினிலே மையிருட்டும் நேரம்

                வைரமணிக் கற்களோடு முத்துகளும் சிதறும்

வான்பரப்பும் மின்னொளியில் மின்மினியாய் மின்ன

                வளர்ந்துவந்த முழுமதியும் வட்டமுகம் காட்டும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக