புதன், 7 அக்டோபர், 2026

 

2026 ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழா கொண்டாட்டத்தில் மாபெரும் கவிதைப் போட்டி

‘சிங்கப்பூர்க் குடிமக்கள்‘ ஏப்ரல் 2026 – 311

மரபுக் கவிதை – எண்சீர்  விருத்தம் (முதல் பரிசு)


சிங்கையவள் பெற்றெடுத்த பிள்ளைகளோ யின்று

சீனமலாய்த் தமிழரெனப் பல்லினமாய்க் கூடி

எங்குமில்லாச் சிறப்புகளை ஏற்றமுடன் பெற்று

ஏகபோக உரிமையோடு சுதந்திரமாய் வாழ்வர்

இங்குள்ள மரபோடு பிறநாட்டுப் பண்பும்

இரண்டறவே கலந்தாலும் நல்லிணக்கம் மாறாச்  

சிங்கப்பூர்க் குடிமக்கள் நாமென்றே எண்ணிச்

சீரோடு சிறப்பினையும் காத்தென்றும் வாழ்வர்

 

கல்லாதார் அனைவரையும் கற்றாராய் மாற்றும்

கல்வியோடு கட்டொழுங்கும் தேவையெனக் கற்பர்

                  கல்லூரிப் பருவத்தில் படிக்கும்முன்  நாட்டின்

கட்டாயச் சேவையினைக் கடமையெனச் செய்வர்

நல்லதொரு மருத்துவமும் நாடெங்கும் கிட்ட

நலமான வாழ்வுதனை நலிந்தோரும் கொள்வர்

பல்லினத்தார் உணவோடு பன்னாட்டுப் பண்டம்

பகலிரவு கடைகளிலும் பாங்காக உண்பர்

                 

                  நுண்ணறிவுச் சிந்தனையின்  நுணுக்கத்தைக் கொண்டு

                        நூற்றாண்டு வளர்ச்சியினை நொடிப்பொழுதில் காண்பர்

                  மண்ணுயிரின் மாண்பிற்கு மதிப்பளிக்க வேண்டி

                        மகத்தான கொள்கைதனை மாந்தர்முன் வைப்பர்

                  அண்டைநாட்டுத் தேவைகளில் ஆதரவு நல்கி  

அன்றுமுதல் இன்றுவரை நடுநிலையில் நிற்பர்

                  கொண்டுள்ள கொள்கையிலே குன்றெனவே ஓங்கி 

குறையில்லாக் குடிமகனாய்க் குவலயத்தில் வாழ்வர்  

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக