புதன், 7 அக்டோபர், 2026

 

“புதுமைத் தேனீ” – மே 2026 – 312

(எண்சீர் விருத்தம்) (முதல் பரிசு)

 

                  பற்றோடும் பணிவோடும் பழகுகின்ற பேரை

                        பண்போடும் பரிவோடும் பாதுகாத்து நின்றாய்!

கற்றோரும் கலையார்வம் கொண்டோரும் கூடும்

                        கவிமாலை காப்பாளர் பொறுப்பினையும் ஏற்றாய்!

நற்றமிழில் பாவடிக்கும் நல்லோரின் நட்பில்

                        நாளெல்லாம் திளைத்தேநீ நன்மைபல செய்தாய்!

வற்றாத உள்ளன்பில் வாஞ்சையுடன்  பேசி

                  வந்தோரை உன்னுறவில் நிலைத்திடவே வைத்தாய்!

 

புதுப்பூவை நாடுகின்ற தேனிபோல நித்தம்

                        புதுமையினைத் தேடுகின்ற நற்செயலைச் செய்தாய்!

செதுக்கியநற் சிலைபோலச் சிந்தையிலே தோன்றும்

                        செஞ்சொல்லால் வடித்திட்ட செந்தமிழ்பா தந்தாய்!

பொதுவுடைமை சிந்தனைக்கும் முன்னுரிமை தந்து

                        புத்தாக்கம் சிதையாமல் படைப்புபல செய்தாய்!

புதுமையோடு படைக்கின்ற புதியவரைப் ஏற்றுப்

                              புகழோடு பாராட்டும் போதுமெனத் தந்தாய்!

                 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக