“காதலே கதிமோட்சம்” – பிப்ரவரி 2026 - 309
(எண்சீர்
விருத்தம்) மூன்றாம் பரிசு
பண்பாட்டுப் பைந்தமிழர் பாங்குடனே போற்றும்
பழங்காலக் காதலையும் இலக்கியங்கள் சாற்றும்
விண்ணுயர மதிப்பினையும் காதலது கொண்டு
வியனுருவின் வேந்தனென விந்தையாக நிற்கும்
கண்ணாடி காட்டுகின்ற பிம்பத்தைப் போலக்
காதலரின் உள்ளத்தின் உண்மையினைச் சுட்டும்
மண்ணுலக மாந்தரவர் மனத்தினிலே தோன்றி
மாண்புடைய காதலென மறையாது வாழும்
வண்ணங்கள் வகைக்கொன்றாய்க் கூடுகின்ற போது
வானவில்லாய் வளைந்தோடி வடிவாக மின்னும்
எண்ணங்கள் இழையோடி ஈர்க்கின்ற போது
ஈருள்ளம் ஒன்றாகி இன்பமதைக் கொள்ளும்
விண்ணோடு விண்ணோக்கி விரைகின்ற மேகம்
வீசுதென்றல் குளிராலே மழையாகிப் பெய்யும்
கண்ணோடு கண்பேசும் காதலரின் நெஞ்சம்
கனிவோடு கருணையையும் கொண்டொழுகி வாழும்
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக