புதன், 7 அக்டோபர், 2026

 

‘பாத்தென்றல் முருகடியான்’

 

மூன்றுதமிழ்க் கலைகளைக் கற்றவராம்

முருகன்மேல் அன்பினைக் கொண்டவராம்

தோன்றிட்டக் கருத்தினை யுரைப்பவராம் 

தொடர்ந்திங்குக் கவிதைகள் புனைந்தவராம்

 

தான்கொண்ட கொள்கையை முன்னிறுத்தித் 

தமிழுக்குத் தொண்டினைச் செய்தவராம்

சான்றோர்தம் கூறிய கூற்றுகளைச்

சந்தத்தில் சொல்லியே வந்தவராம்

 

பழனியென்னும் இயற்பெயர் கொண்டவராம்

பாத்தென்றல் பட்டமும் பெற்றவராம்

கழகத்தின் தமிழவேள் விருதோடு

கரிகாலன் விருதினை வென்றவராம்

 

சிங்கையவள் சீர்தனைச் சிந்துபாட்டில்

தேம்பாவை யாக்கியே சிறந்தவராம்

சங்கமம் என்றொரு காப்பியத்தைத்

தனித்தமிழில் கூடுகை என்றவராம்  

 

வெண்பாவோ விருத்தமோ யென்றாலும்

விருப்பமுடன் இலக்கியம் செய்தவராம்

திண்ணப்பர் என்றொரு மேதைக்குத்

தெவிட்டாப்பிள் ளைத்தமிழ் தந்தவராம்

 

கழனிமுதல் பார்த்தவை அத்தனையும்

கவிதைக்கு கருவெனக் கொண்டவராம்

குழந்தைக்கும் குதுகலப் பாட்டெழுதி

குன்றிலிட்ட விளக்கென மிளிர்ந்தவராம்

 

 கணேசுகுமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக